சென்னை: பழம்பெரும் நடிகை ஜெயக்குமாரி தமிழிலில் நூற்றுக்கு நூறு, எங்கிருந்தோ வந்தால், வைரம், ரிக்ஷாக்காரன், தேடி வந்த லட்சுமி, மாணிக்கத் தொட்டில், இவள் ஒரு சீதை, பிஞ்சு மனம், நாடோடி, அனாதை ஆனந்தன், மன்னவன், காசேதான் கடவுளடா உட்பட பல்வேறு படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தவர். இவர் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்குத் திருமணமாகி ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.
வேளச்சேரியில் வசித்து வந்த அவருக்கு தற்போது சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று(செப்.18) சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நடிகை ஜெயக்குமாரியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது, நடிகை ஜெயக்குமாரி முதியோர் உதவித்தொகை வேண்டும், தங்குவதற்கு வீடு வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார். சித்தலப்பாக்கம் பகுதியில் வசிக்கும் அவருக்கு உடனடியாக முதியோர் உதவித் தொகை பெற ஆவன செய்யப்படும் என்று உறுதியளித்தும், அவருடைய செலவுக்கு ரூ.10,000 ரொக்கத்தை வழங்கினார்.
இதையும் படிங்க:புரட்டாசி மாதம் தொடங்கிய நிலையில் இறைச்சி விற்பனை மந்தம்!