சென்னை: ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ள திரைப்படம் 'பார்க்கிங்' (Parking). இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் (Passion Studios) தயாரித்துள்ளது. சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்த படம். கடந்த டிசம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மிக்ஜாம் புயல் காரணமாக, படத்தின் வசூல் சிறிது பாதிக்கப்பட்டாலும், நல்ல படம் என்று பெயர் எடுத்துள்ளது. இதில் எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பு பேசப்பட்டது. இந்த நிலையில், பார்க்கிங் திரைப்படத்தின் வெற்றி விழா, சென்னை வடபழனி பிரசாத் லேபில் இன்று (டிச.16) நடைபெற்றது.
இவ்விழாவில் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா, இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். விழா மேடையில் பேசிய நடிகர் ஹரிஷ் கல்யாண், 'படத்தை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்த மீடியாவுக்கு நன்றி. இதன் வெற்றி எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று. பார்வையாளர்களை தியேட்டரில் நேரில் சந்தித்தோம்.
இந்தப் படத்தை எல்லோரும் அப்படி கொண்டாடினார்கள். இந்த வருடத்தின் 'ஹிட்' படங்களில் இது நிச்சயம் இருக்கும் என பலரும் சொன்னார்கள். நீங்கள் கொடுத்த அன்பால்தான் இங்கு நிற்கிறோம். இந்த வாய்ப்பை கொடுத்த இயக்குநர் ராம், தயாரிப்பாளர் சினிஸ், சுதன் ஆகியோருக்கு நன்றி. வெற்றி இயக்குநர் பட்டியலில் ராம் நிச்சயம் இருப்பார்.
படத்தில் வேலை பார்த்த எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா, பிரார்த்தனா ஆகிய அனைவருக்கும் நன்றி. இந்த வெற்றி சந்தோஷத்தையும் தாண்டி பயத்தையும், பொறுப்பையும் கொடுத்துள்ளது. மிகவும் கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்துள்ளேன் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால், என்னுடைய ஒவ்வொரு படத்திலும் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற பொறுப்பு கூடியுள்ளது' என்று கூறினார்.
விழா மேடையில் பேசிய நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், 'நான் படப்பிடிப்பில் கோபமாக இருந்ததாக சொன்னார்கள். நான் கதாபாத்திரத்தை உள்வாங்கியதுதான், அதற்கு காரணம். அதேபோல், படப்பிடிப்புத் தளத்திற்கு வந்தால் முதலில் செல்போன்களை எடுக்காதீர்கள் என்று நான் பலமுறை சொல்லியிருக்கிறேன்.
அதேபோல், இயக்குனர் ராமிடம் நான் அடிக்கடி சொல்வது ஒன்று சாப்பிடாமல் வேலை செய்யாதீர்கள், மற்றவர்களையும் சாப்பிட வைத்து வேலை செய்யுங்கள். கட்டாயம் ஒரு மணி நேரம் இடைவேளை விட்டு, சாப்பிட்டுவிட்டு அப்புறம் வேலை செய்யலாம் என்றுதான் சொன்னேன், அது கொஞ்சம் பாசத்தால் கடிந்து கொண்டேன். அது தவறாக இருந்திருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்' என்றார்.
இதனைத்தொடர்ந்து இவ்விழாவில் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு, படத்தின் நாயகன் ஹரிஷ் கல்யாண் தங்க வளையம் பரிசளித்தார்.
இதையும் படிங்க: இன்று மிரட்ட வருகிறது டிமான்டி காலனி 2 டிரெய்லர்!