சென்னை: தமிழ் சினிமாவில் அவ்வப்போது சிறிய பட்ஜெட் படங்கள் மிகப்பெரிய கருக்கதையோடு வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிடும். அப்படிப்பட்ட படமாக தான் இந்த வாரம் வெளியாக உள்ளது 'பெல்' திரைப்படம். அறிமுக இயக்குனர் வெங்கட் புவன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், மறைந்த நடிகர் நித்தீஷ் வீரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தை பீட்டர் ராஜ் தனது ப்ரோகன் மூவிஸ் மூலம் தயாரித்துள்ளார். இயற்கை மருத்துவத்தின் சிறப்புகள் பற்றியும், பழந்தமிழர்களின் மருத்துவம் சார்ந்த கண்டுபிடிப்புகள் பற்றியும் பேசும் படமாக 'பெல்' திரைப்படம் உருவாகியிருக்கிறது. இதில் குருசோம சுந்தரம், ஶ்ரீதர் மாஸ்டர், நித்தீஷ் வீரா, பீட்டர் ராஜ், துர்கா, ஸ்வேதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பரணி கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராபர்ட் இசை அமைத்திருக்கிறார். மேலும் இப்படம் பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது. இந்த படத்தைப் பார்த்த அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் நடிகர் குரு சோமசுந்தரம் பேசியதாவது, "எனக்கு பத்திரிகையாளராக வேண்டும் என்று ஆசை இருந்தது. ஏனென்றால் நான் நிறைய நாவல்கள் படிப்பேன். குறிப்பாக ராஜேஷ் குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேந்திர குமார், கிரைம் நாவல்கள் அதில் பத்திரிகையாளர் கதாபாத்திரம் வருவதை பார்த்து பத்திரிகையாளராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதனால் பத்திரிகையாளர்கள் மீது நிறைய மரியாதை வைத்திருக்கிறேன் என்றார்.
பட தயாரிப்பாளர் பீட்டர் ராஜுக்கு எனது வாழ்த்துகள். போட்ட முதலீடு அவருக்கு திரும்ப கிடைக்கணும். பெல் பட கதையை இயக்குனர் புவன் கூறும் போதே பிடித்தது. ரொம்ப பொடன்ஷியல் உள்ள கதை. எனது கதாபாத்திரம் வித்தியாசமான பார்வை கொண்டது என்பது தெரிந்தது. அதனால் தான் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இப்படத்திற்கு இசையும் அருமையாக அமைக்கப்பட்டுள்ளது. ஆகையால் கண்டிப்பாக இப்படம் வெற்றி பெறும் . அதற்கு உங்கள் அனைவரின் ஆதரவு தேவை" எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் புவன் பேசியதாவது, "படத்தை எடுக்க தயாரிப்பாளர் முக்கியம். பீட்டர் ராஜ் எனது நண்பர், அவர் இப்படத்தை எடுங்கள் நான் தயாரிக்கிறேன் என்றார். மனதில் எனக்கு ஒரு பயம் இருந்தது. நம்மை நம்பி படமெடுக்கிறார், படம் நன்றாக வரவேண்டும் என்று எண்ணினேன். அவர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நல்ல பட தர வேண்டும் என்று ரொம்பவும் ஆராய்ந்து இந்த கதையை தேர்வு செய்தோம். அவர் ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் படத்தின் உதவி இயக்குநர் போல் என்னுடனேயே இருந்து எல்லா பணிகளிலும் உதவினார்.
இன்று வரை அவர் உடனிருந்து எல்லாவற்றையும் செய்து தருகிறார். அவர் எனக்கு கடவுள் கொடுத்த பரிசுதான். அவருக்கு என் நன்றி. இந்த படத்தை புரோகன் மூவிஸ் பீட்டர் ராஜ், டேவிட் ராஜ் தயாரித்திருக்கிறார்கள். படத்தின் கதை மற்றும் வசனத்தை வெயிலோன் எழுதி உள்ளார். அவரும் எனது நண்பர் தான். தமிழில் நிறைய விஷயங்கள் மறைந்து கிடக்கிறது. வெயிலோன் மிகப் பெரிய தமிழ் விரும்பி. நிறைய படிப்பார், பேசுவார்.
அவர்தான் பழந்தமிழர் மருத்துவம் பற்றிக் கூறிய அகத்தியர் 6 ரகசிய மருத்துவ குறிப்புகள் இருக்கிறது. அது பலருக்கு தெரியாது. அதை மையமாக வைத்து கதை எடுப்போம் என்றார். அது சொல்ல வேண்டிய விஷயம் என்று எனக்கும் தோன்றியது. அதை தயாரிப்பாளரிடம் சொன்னபோது அவரும் ரொம்பவே பாராட்டி தயாரிக்க முன் வந்தார். படத்தில் முக்கிய வேடம் ஏற்ற குரு சோமசுந்தரம் நடிப்பு பற்றி எல்லோருக்குமே தெரியும், மிகவும் அருமையாக கலக்கி இருக்கிறார். ரொம்ப ஆதரவாகவும் இருந்தார்.
அவரிடம் முதலில் கதையை சொன்னபோதே நடிக்க சம்மதம் தெரிவித்தார். அதுவே எனக்கு பெரிய தைரியத்தை கொடுத்தது. கதாநாயகனாக நடித்திருக்கும் ஶ்ரீதர் மாஸ்டருக்கு கதையை ஒன்லைன் தான் சொன்னேன் அவருக்கும் பிடித்திருந்தது. அவர் நடன இயக்குனராக இருந்தாலும், அவருக்குள் ஒரு நடிகன் மறைந்திருக்கிறான். அது இப்படத்தில் வெளிப்பட்டிருக்கிறது.
கதாநாயகி துர்கா. அவரும் மிகவும் நன்றாக நடித்துள்ளார். காட்டுக்குள் பெரும்பகுதி படப்பிடிப்பு என்றபோது ஆண்கள் சமாளித்து விடுவார்கள். ஆனால் ஒரு பெண் என்பவருக்கு பல அசவுகரியங்கள் இருக்கிறது. அதை பொருட்படுத்தாமல் ரொம்ப தைரியமாக நடித்திருக்கிறார். மற்றொரு நாயகி ஸ்வேதாவும் நன்றாக நடித்திருக்கிறார். கேமராமேன் மற்றும் ரமேஷ் பாலாஜி யூனிட் மிகவும் ஆதரவாக இருந்தனர்" என்றார்.
மேலும் கதை குறித்து கூறும் போது,"பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியர், பாதுகாக்கப் படவேண்டிய 6 ரகசியங்களை தனது நம்பிக்கைக்குரிய 6 சீடர்களுக்குச் சொல்லி அதை பாதுகாக்கவும் கட்டளையிட ரகசியங்ளைப் பாதுகாப்பதில் நன்மைக்கும், தீமைக்கும் இடையே நடந்த போராட்டமே இப்படத்தின் மையக்கதையாகும்" என்றார்.
கதாநாயகி துர்கா பேசியதாவது, "சினிமாவில் நடிக்க வேண்டும் என்று பலமுறை முயன்றிருக்கிறேன். ஆனால் நான் திருமணம் ஆன பெண் என்று சொல்லி வாய்ப்பு தர மறுத்தார்கள். ஆனால் பெல் படத்தில் எனக்கு கிடைத்த வாய்ப்பு வாழ்வில் மறக்க முடியாது. ரொம்ப சீனியர்களுடன் இணைந்து நான் நடித்தது நல்ல அனுபவம்.
இப்படத்தில் வேறு பாத்திரத்துக்குத்தான் ஆடிஷன் செய்தேன். ஆனால் ஹீரோயின் வேடம் தந்தார்கள். ஆடிஷன் இல்லாமல்தான் நடித்தேன். இயக்குனர் தயாரிப்பாளர் உடன் நடித்தவர்கள் டெக்னீஷியன்கள் என்னை நடிக்க அனுமதித்த என் கணவர் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.