சென்னை: ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான தங்கர் பச்சான் தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களுக்காக அறியப்படுபவர். சினிமா மூலம் தன் மக்களின் வாழ்வியலை படம்பிடித்து காட்டுபவர். இவரது இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் இப்போது வரையிலும் ரசிகர்கள் மனதில் தனியிடம் பிடித்துள்ளன. சொல்ல மறந்த கதை, ஒன்பது ரூபாய் நோட்டு, பள்ளிக்கூடம் என மண்சார்ந்த கதைகளை செல்லுலாய்டில் செதுக்கிய கலைஞன்.
சொல்ல மறந்த கதை படத்தில் வீட்டோடு மாப்பிள்ளையாகி போன ஒருவன் பட்ட அவமானங்களை எளிமையாக காட்சிபடுத்தியிருப்பார். பள்ளிக்கூடம் படத்தில் ஒரு பள்ளிக்கூடம் இடிக்கப்படுவதை தடுக்க போராடும் பழைய மாணவர்களின் கதையை சொல்லியிருப்பார். ஒன்பது ரூபாய் நோட்டு குடும்பத்துக்காக உழைத்து தேய்ந்த ஒருவரின் கதையாக இயக்கி இருப்பார் தங்கர் பச்சான்.
இவரது இயக்கத்தில் 2002ஆம் ஆண்டு பொங்கல் அன்று பல பெரிய படங்களோடு சுமார் 8 படங்களுக்கு மத்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி கண்ட படம் அழகி. மக்கள் மனதை வருடி கொள்ளை கொண்ட படம். சிறிய வயது பள்ளிக்கூட வாழ்க்கையும், மீசை அரும்பிய வயதில் தோன்றிய முதல் காதலையும், அது கொடுத்த வலியையும் அற்புதமாக சொன்ன படம்தான் அழகி.
1986ஆம் ஆண்டில் சண்முகம்-தனலட்சுமி ஆகிய இருவரின் கதை கல்வெட்டு எனும் பெயரில் சிறுகதையாக உருவானது. பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் “அழகி” எனும் பெயரில் திரைப்படமாக உயிர்பெற்று மக்களின் நெஞ்சங்களில் நிறைந்தது. ஒவ்வொருவரும் தனது தனலட்சுமியைத் தேடி அலைந்தது போல காலம் பிரித்து வைத்து, சேர்ந்து வாழ கிடைக்காமல் போன தங்களின் சண்முகத்தையும் தேடினார்கள். இன்னும்கூட தேடிக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் வெளியாகி இருபது ஆண்டுகள் கடந்தும் அழகி கதை இன்றும் உயிர்ப்புடன் வாழ்கிறது.
அழகி வெளியாகி 20 ஆண்டுகளாகி விட்டது. தனது முதல் தயாரிப்பையே பெரும் வெற்றி படமாக கொடுத்த இயக்குநர் தங்கர் பச்சானை, கரூரில் வசிக்கும் தயாரிப்பாளர் உதயகுமார் நேற்று சென்னை வந்து சந்தித்து விட்டு சென்றார். அழகி பாதித்தது போல் இன்னும் எந்த கதையும் என்னை பாதிக்கவில்லை என்றார் தயாரிப்பாளர் உதயகுமார்.
'அழகி'யை இயக்கியதற்காக என்னை பாராட்டுபவர்கள் முதலில் அதன் தயாரிப்பாளர் உதயகுமாரைத் தான் பாராட்ட வேண்டும், நெடு நாட்களுக்குப்பின் நிகழ்ந்த சந்திப்பில் குடும்ப நலன் தமிழ்த்திரையுலக சிக்கல்கள் குறித்தும் உரையாடினோம். சிறந்த மனிதரை நண்பராகப் பெற்றது என் கொடுப்பினை, என்றார் அழகி இயக்குனர் தங்கர் பச்சான். இந்த சந்திப்பின் போது இருவருமே அழகி இரண்டாம் பாகம் எடுப்பது பற்றி பேசிக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Pathu Thala: சிம்புவின் 'பத்து தல' ஆடியோ வெளியீட்டு தேதி அறிவிப்பு!