சென்னை: தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த், நுரையீரல் பாதிப்பு உள்ளிட்டவை காரணமாகச் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இதையடுத்து, "விஜயகாந்த் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அவர் மருத்துவமனையிலிருந்து சமீபத்தில் வீடு திரும்பினார். இதன் தொடர்ச்சியாக, சென்னை திருவேற்காட்டில் டிச.14 ஆம் தேதி நடந்த தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்றார். இதைத்தொடர்ந்து, பிரேமலதா விஜயகாந்த்-ஐ அக்கட்சியின் பொதுச்செயலாளராக நியமனம் செய்வது உள்ளிட்ட 18 முக்கிய தீர்மானங்களும் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, தமிழ்நாடெங்கும் உள்ள இவரது ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் எனப் பலரும் விஜயகாந்த் உடல்நிலை பூரண குணமடைய வேண்டி பல்வேறு வேண்டுதல்களைச் செய்து வருகின்றனர். அதன்படி, பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை, தேவாலயங்களில் சிறப்பு ஜெபக்கூட்டங்கள், கோயில்களில் கூட்டுப் பிரார்த்தனை உள்ளிட்ட பலவகைகளிலும் வழிபாடு செய்து வருகின்றனர்.
நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துவரும் விஜயகாந்த்தை இதேபோல, அரசியல் குறித்த நிகழ்ச்சிக்காக அலைக்கழிக்க வேண்டாம் என அவரைக் காணும் தொண்டர்கள் என குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
அந்தவகையில், அவ்வப்போது அவரின் பிறந்த நாள் விழா உள்ளிட்ட நாட்களில் அவரைக் கண்டு பலப் பெண்களும் கண்ணீர் சிந்திய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இதற்கிடையே, பசங்க பட இயக்குநர் பாண்டியராஜன் இது தொடர்பாகத் தனது சமூக வலைத்தளத்தில், உடல்நிலை சரியில்லாத நிலையில் விஜயகாந்த்தைச் சிரமப்படுத்த வேண்டாம் என தெரிவித்து இருந்தார்.
இயக்குநரும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி, இந்த சமூகத்தோடும், அரசியல் எதிரிகளோடும், தன் உடல் நலத்தோடும் எவ்வளவோ போராடிவிட்ட நிலையில், இன்னுமா போராட வேண்டும்? என கேள்வியெழுப்பியுள்ளார். இந்த போக்கு சரியானது அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
அந்தப் பதிவில், 'கேப்டன்.. ஆரம்பத்தில் எந்தக் கப்பல்ல கேப்டனா இருந்தாரு விஜயகாந்துன்னு கிண்டல் பண்ணியவங்க... பின்னர்தான் புரிந்துகொண்டனர் அவர் சினிமாவில் சிதைந்து கிடந்த பல கப்பல்களைச் சரிசெய்தவர் என்று. அதன்பிறகு கிண்டலடித்த அதே வாய்கள் கேப்டன் கேப்டன் என வாயாரக் கூப்பிடத் தொடங்கியது.
நடிகர் சங்கத் தலைவராக இருக்கும் போது அச்சங்கத்தைத் தலை தூக்கி நிறுத்தியவர் அவர். கலை நிகழ்ச்சியொன்றில் ரஜினி கமல் என நட்சத்திரப் பட்டாளங்களைக் கையாண்டு கடனையடைத்தவர். சொன்னதைச் செய்து காட்டுவதையே இலட்சியமாக வைத்திருந்தவர். நடிகர் சங்க கலை நிகழ்ச்சியில், வரிசையாகப் பேருந்துகள் அவர்களை ஏற்றிச் செல்ல வந்தபோது பல கலைஞர்கள் பஸ்ஸிலா? என தயங்கி நின்ற போது, ஒரு பேருந்திலிருந்து கையசைக்க "சூப்பர் ஸ்டாரே பேருந்தில்தான் போகிறாரா? நாமும் ஏறிக்கொள்வோம்" என பேருந்துகள் நிறைந்தன.
இதன்பின்னால் விஜயகாந்தின் அதிபுத்திசாலித்தனமும் நிறைந்திருந்தது என சொல்லக் கேள்வி. எல்லா நடிகர்களும் பேருந்தில் ஏறந் தயங்குவார்கள் என அறிந்திருந்த விஜயகாந்த் சூப்பர் ஸ்டாரிடம், " நீங்க முதல்ல பேருந்தில் ஏறிட்டா அப்புறம் அனைவரும் ஏறிடுவாங்க" என சொல்லியிருக்கிறார். "அதற்கென்ன ஏறிட்டாப் போச்சு" என தனக்கேயுரிய பாணியில் சொன்னதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
தவிர, நடிகர் சங்கத்தில் ஒரு நடிகர் மீதோ நடிகை மீதோ புகார் வந்தால் அழைத்து விசாரிப்பார். சம்பந்தப்பட்ட நடிகர் நடிகை மீது தவறு இருந்தால் தயாரிப்பாளர் சங்கத்திற்குச் சென்று மன்னிப்புக் கேட்டு சமூகமாக அந்தப் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள அனுப்பி வைப்பார். நடிகர் நடிகைகள் மீது தவறில்லை என்றால் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் நடிகர் சங்கம் வந்துதான் தீர்வு காண வேண்டும் என்பதில் கடைசி வரை உறுதியாக நிற்பார்.
தன் உடன் பிறந்த சகோதரர்களாய் ஒவ்வொரு உறுப்பினரையும் மதித்தவர். நல்ல மனிதன் என அனைவரிடமும் பெயரெடுத்தவர். படப்பிடிப்புத்தளத்தில் அனைவருக்கும் சமமான , தரமான உணவு... யார் வந்தாலும் அடைக்கலம் என தன்னிகரற்ற மனிதராய் விளங்கியவர் கேப்டன். எல்லோரும் தலைவர் பிரபாகரனின் பெயரை உச்சரிக்க மறுத்த போது படத்திற்கு கேப்டன் பிரபாகரன் எனவும், மகனுக்குப் பிரபாகரன் எனவும் பெயரிட்டவர்.
காவிரியில் நீர் தர கர்நாடகா மறுத்தபோது, அம்மாநிலத்துக்கு வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்துவோம் என குரல் கொடுத்து நெய்வேலி போராட்டம் நடந்தது. அப்போது 5,000 நடிகர்களை ஒன்றுதிரட்டிப் போராடியவர். அரசியலுக்கு முழுக்க தகுதியான மனிதர்.. தகுதியான நேரத்தில் களமிறங்கி அதில் தனது கணக்கை அட்டகாசமாகத் தொடங்கியவர் உடல் நலத்தை விட்டுவிட்டார்.
உடல் நலம் பேணாததற்கு அரசியலே மிக முக்கிய காரணமாகிவிட்டது. எனக்கெல்லாம் மாபெரும் நம்பிக்கை இருந்தது கேப்டன் பழையபடி சிங்கமாகக் கர்ஜிக்க வந்துவிடுவார் என்று. ஆனால், சமீபத்திய அவரது காணொளியைப் பார்த்தபோது கண்ணீர்தான் வந்தது. பாழாப்போன அரசியல் அவரை இப்படி நம்மைப் பார்க்க வைத்துவிட்டதே எனக் கலங்கிப் போனேன்.
தவிடு பொடியாக்கும் ஆயிரம் யானை பலம் கொண்ட பீமனைப் போல இருந்தவரை வீல் சேரில் வைத்து அரசியல் செய்ய அழைத்து வந்த போது நெஞ்சே உடைந்துவிட்டது. மீண்டு வந்த மனிதனை இப்படியா பார்க்க வேண்டும்? என குமைந்து போனேன்.இந்த சமூகத்தோடு, அரசியல் எதிரிகளோடு, தன் உடல் நலத்தோடு எவ்வளவோ போராடிவிட்டார்! இன்னுமா போராட வேண்டும்? தான் எந்நிலையிலிருந்தாலும் போராடிக் கொண்டே இருப்பது சரியல்ல.
இப்போதுதான் தலைமை மாறிவிட்டதே... இனியேனும் அவரை வதைக்காமல் பாதுகாத்து வைப்போம். இன்னும் பல ஆண்டுகள் அவர் நலமோடு நம்மோடிருக்கட்டும் என்பதே என் ஒரே ஆசை. கேப்டன் உங்களுக்காக வேண்டிக் கொள்ளும் பல கோடி பேரில் நானும் ஒருவன். நலமே சூழ்க உம்மை. என்றும் மரியாதையுடன், சுரேஷ் காமாட்சி' என அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம்.. பொதுக்குழு கூட்டத்தில் 18 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!