பழிக்குப் பழிவாங்கும் கதைக்களம் கொண்ட, விரைவில் வெளிவரவுள்ள அதிரடி தமிழ்த் திரைப்படமான ’சாணி காயிதம்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் அமேசான் ப்ரைம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ’புதுப்பேட்டை’, ’7ஜி ரெயின்போ காலனி’, ’மயக்கம் என்ன’ போன்ற தமிழ்த் திரைப்படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் செல்வராகவன் இப்படத்தில் ’சங்கையா’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தான் நடிக்க வந்ததைக் குறித்து அவர் கூறுகையில், “நான் இயக்குநராக இருக்கும் காலத்தில் இருந்தே நேரத்தைப் பார்த்து வேலை செய்வது கூடாது என்ற ஒரு கொள்கை எனக்கு இருந்தது. செய்யும் பணியில் முழுக்கவனத்தோடு செயல்படும்போது நேரம் போவதே தெரியாது. அனைத்தும் என் விருப்பப்படி நடந்த பிறகுதான் 'பேக்கப்' செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர்வேன்.
இது அனைத்துப்பணிகளுக்கும் பொருந்தும். நடிப்பது சலிப்பை ஏற்படுத்துவதாகவே இருக்கும் என்று நான் முதலில் நினைத்திருந்தேன். ஆனால், அது ஒவ்வொரு நாளும் பல விஷயங்களைக் கற்பிப்பதாக இருந்தது. பொறுமை காத்து என்னுடன் இணைந்து நடித்த கீர்த்தி சுரேஷ் மற்றும் அருண் ஆகியோருக்கு நன்றி” என்றார்.
கான்ஸ்டபிளாகப் பணிபுரியும் பொன்னி (கீர்த்தி சுரேஷ்) தனது ஐந்து வயது மகள் தனா மற்றும் அரிசி ஆலையில் கூலியாளாகப் பணிபுரியும் அவரது கணவர் மாரி ஆகியோருடன் சேர்ந்து வாழும் மனதை நெகிழ வைக்கும் வாழ்க்கைப் பயணத்தை ’சாணி காயிதம்’ சித்தரிக்கிறது. ஒரு துரதிர்ஷ்டவசமான இரவில், அவள் அனைத்தையும் இழக்க நேரிடுகிறது.
தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பழிவாங்க, சங்கையாவின் (செல்வராகவன்) ஆதரவைப் பெறுகிறாள். அவருடன் தனது கசப்பான கடந்த காலத்தைப் பகிர்ந்து கொள்கிறாள். ஸ்கிரீன் சீன் மீடியாவின் பேனரின் கீழ் தயாரிக்கப்பட்ட ’சாணி காயிதம்’ மே-6 அன்று பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக உலகம் முழுவதும் திரையிடப்படும். இப்படம் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் (சின்னி என்ற பெயரில்) வெளியாகவுள்ளது. ‘ராக்கி’ படத்தை இயக்கிய அருண் மாதேஷ்வரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இதையும் படிங்க: கோபத்தில் மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்..அதிர்ச்சியடைந்த இசைப்புயல்!