சென்னை: ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம், மிஷன் சாப்டர் 1. இப்படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி, கடந்த 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள மிஷன் சாப்டர் 1 ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
படத்தில் சில்வாவின் சண்டைக் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இதனையடுத்து படத்திற்கு ரசிகர்களின் வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி, நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் ஏ.எல்.விஜய், அருண் விஜய், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் அருண் விஜய், “இது நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிதான். எப்போதும் நல்ல கதையை மக்கள் கைவிட்டது இல்லை. ஒவ்வொரு படத்திலும் எனக்கு சில பிரச்னை இருக்கும். படம் நடிக்கும் போது சில கஷ்டங்கள் இருந்தது. நிறைய இடங்களில் சென்று பார்த்தோம். மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளார்கள்.
வரும் வாரங்களில் அதிக தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. ஒரு படம் ரிலீஸ் ஆகி மக்களிடம் கொண்டு சேர்ப்பது எளிமையான விஷயமல்ல. படம் ரிலீஸ் ஆகும் போது எந்த அளவுக்கு பிரச்னை இருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். எல்லா இடங்களிலும் இருந்து படத்திற்கு வரவேற்பு கிடைக்கிறது.
ஒவ்வொரு படமும் வித்தியாசமாகவும், ரசிகர்கள் தங்களுடன் தொடர்புபடுத்தி பார்க்கும் வகையிலான கதைகளாகத்தான் இருக்கும். இந்த படத்தில் அடிபட்டது சரியாகி விட்டது. இது வேறு படத்தில் சண்டை பயிற்சியின் போது அடிபட்டது. விரைவில் இந்த காயம் ஆறி விடும்” என்று கூறியுள்ளார். பின்னர் நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் அபி ஹாசன், “நான் தான் சிங் கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். நான் எதிர்பார்த்ததை விட நல்ல பாராட்டு கிடைத்தது. இயக்குநருக்கும், அருண் விஜய்க்கும் நன்றி” என கூறினார்.
இதனையடுத்து விழாவில் பேசிய இயக்குநர் ஏ.எல்.விஜய், “இந்த நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி எதற்கு என்றால், படம் வெளியான போது குறைவான திரையரங்குகள்தான் கிடைத்தது. நான் யாரையும் குறை சொல்லவில்லை. இரண்டு பெரிய படங்கள் வரும்போது எங்களுக்கு இதுபோல் அமைந்துவிட்டது. படம் வெளியான பிறகு எடிட்டர் மோகன், எனது அப்பா, விஜயகுமார் உள்பட எல்லோரும் என்னை பாராட்டினார்கள்.
படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகச் சொன்னார்கள். அதன் பிறகு எங்களது டீம் கடினமாக உழைத்தது. நல்ல விமர்சனங்கள் வந்ததையடுத்து, காட்சிகள் அதிகரித்துள்ளது. மீடியாவுக்கு நன்றி. எங்களுக்கு இந்த வாரம்தான் முதல் வாரம் மாதிரி உள்ளது. ஒரு காதல் கதைதான் பண்ணுவதாக இருந்தது. ஆனால், அது சுலபமாக செய்திடலாம். இது என்னுடைய ஸ்டைலில் இருந்து வித்தியாசமான படம்.
தயாரிப்பாளர்கள் எந்த இடத்திலும் இந்த படத்தை விட்டுக் கொடுக்காமல் தயாரித்துள்ளனர். லைகா நிறுவனத்திற்கு நன்றி. அனைத்து மொழிகளிலும் வெளியிட அச்சம் என்பது இல்லயே என்ற தலைப்பை மிஷன் என்று மாற்றினோம். ஜிவி பிரகாஷ் குமாரின் இசை இப்படத்தை தூக்கி நிறுத்தியுள்ளது.
இயல் குழந்தைக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது. இப்படத்தில் சண்டைப் பயிற்சியாளர் சில்வா மாஸ்டரின் உழைப்பும் மிகப் பெரியது. நடிகை நிமிஷா சஜயன் இந்திய சினிமாவின் பெருமையாக மாறப்போகிறார். சரிதா, சாவித்ரி போல திறமையான நடிகையாக வலம் வருவார்” என்று பேசினார்.
இதையும் படிங்க: பெரியார் குறித்த சர்ச்சை கருத்து - சந்தானம் மீது கடுகடுக்கும் நெட்டிசன்கள்!