சென்னை: இந்திய சினிமாவில் தமிழ் சினிமா சற்று வித்தியாசமானது. ஒன்றுமே இல்லாமல் வந்தாலும் இங்கே நீ ராஜாவாகலாம். நீ ராஜாவாக இருந்தாலும் உன்னை கீழிறக்கி விடும் சக்தி கொண்டது, தமிழ் சினிமா. இதில் ஒருவன் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறுகிறான் என்றால், அதற்கு திறமை மட்டும் போதாது. கடினமான, அசுரத்தனமான உழைப்பு இருந்தால் மட்டுமே அது சாத்தியம்.
அப்படி தனது அபாரமான நடிப்பு ஆற்றல் மற்றும் கடின உழைப்பால் ஹாலிவுட் வரை சென்று தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்து இருப்பவர்தான் நடிகர் தனுஷ், இன்று தனது 40வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை தனுஷின் ரசிகர்கள் சிலாகித்து கொண்டாடி வருகின்றனர். ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்பு தனுஷே இதை நினைத்துப் பார்த்து இருக்க மாட்டார்.
ஒல்லியான தேகம், பல்லி நடிகர், குச்சி நடிகர் என்று பத்திரிகைகளே இவரை பற்றிய விமர்சனங்களை எழுதியது. அப்போது எல்லாம் மனமுடைந்து அழுது இருக்கிறேன் என்று ஒருமுறை பேட்டியில் தனுஷ் கூறியிருந்தார். ஆனால், இவரிடமும் ஒரு திறமை இருக்கிறது என்று பாலு மகேந்திரா கண்டறிந்தார். புதுப்பேட்டை படத்தில் 'தோ பார்ரா இது இன்னும் நிக்குது' என்று கூறி சுற்றியிருப்பவர்கள் கலாய்த்து சிரித்துக்கொண்டிருப்பார்கள்.
அப்போது தனுஷ் ரத்த வெள்ளத்தில் போராடிக் கொண்டிருப்பார். அதில் சிரித்தவர்கள் கடைசியில் தனுஷிற்கு கைதட்டுவார்கள். அப்படித்தான் முதலில் இவனெல்லாம் யார் என்று தள்ளிய திரையுலகம், தற்போது தலையில் வைத்துக் கொண்டாடுகிறது. இந்த காட்சியை தனுஷின் ஆரம்பகால திரையுலக வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்க்க முடியும். ஆனால், அப்படி கொஞ்சம் கொஞ்சமாக தன்னை செதுக்கிக்கொண்ட கலைஞன்தான் தனுஷ்.
என்னதான் அண்ணன், அப்பா தயவில் சினிமாவிற்கு வந்தாலும் தனித்திறமை இருந்தால்தான் சினிமாவில் வெற்றி பெற முடியும். அதற்கு உதாரணம் இவர். தனுஷின் சமரசமில்லாத உழைப்புதான் இவரது இத்தனை உயரங்களுக்கு காரணம். காதல்கொண்டேன் படப்பிடிப்பு தளத்தில் 'இவனெல்லாம் ஹீரோவா?' என்று அவர் காதுபடக் கூறி சுற்றியிருக்கும் கூட்டமே சிரிக்கும்போது, விமர்சனங்களை எதிர்கொள்ளத் தெரியாத அந்த வயதில் தனுஷ் என்னவெல்லாம் யோசித்திருப்பார்.
சினிமாவே வேண்டாம் என்று கூட யோசித்திருக்கலாம். ஆனால், இன்று அவரை ஹாலிவுட் வரை கைப்பிடித்து அழைத்துச் சென்று சேர்த்திருக்கிறது காலம். சர்வதேச எல்லை கடந்து தனது நடிப்பால் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். உருவம் மட்டுமே ஒருவனை அடையாளப்படுத்தாது என்பதை நிரூபித்த பல நடிகர்களுள் இவரும் ஒருவர்.
தற்போது வரை 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள தனுஷ் 14 தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள், 9 தனியார் தொலைக்காட்சி விருதுகள், 7 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், 5 தனியார் இதழ் விருதுகள், 5 எடிசன் விருதுகள், 4 தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட விருதுகளை வென்று குவித்துள்ளார். இந்திய பிரபலங்களின் வருவாயை அடிப்படையாகக் கொண்ட ஃபோர்ப்ஸ் இந்தியா பிரபலங்கள் 100 பட்டியலில் தனுஷ் ஆறு முறை சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவனுக்கு நடிக்கவே வராது என ஏளனமாக கூறியவர்கள் மத்தியில் நடிகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், பாடகர் , இயக்குநர் என அத்தனை திறமைகளையும் படைத்து வெற்றி வாகை சூடியவர். அதுமட்டுமின்றி சரியான திறமையாளர்களை கண்டுபிடிப்பதில் இவர் வல்லவர் என்றும் கூறலாம். வெற்றி மாறன் தொடங்கி சிவகார்த்திகேயன் வரை இவர் கணித்த கணிப்பு என்றுமே தப்பாது.
ஒரு இயக்குநருக்கு தன் அலைவரிசையில் பயணிக்கும் ஹீரோ கிடைத்துவிட்டால் அதைவிட பெரிய விஷயம் என்ன இருக்கிறது. அப்படி வெற்றிமாறனுக்கு கிடைத்தவர் தனுஷ். இருவருக்குமான நட்பு, நம்பிக்கை இன்றைய இளம் தலைமுறையினர் கற்றுக்கொள்ள வேண்டியது.
பவர் பாண்டி படம் மூலம் மாறுபட்ட காதலைச் சொல்லியிருப்பார். இவரது பாடல் வரிகளிலும் ஒரு முதிர்ச்சி தென்படும். கேட்டால், எல்லாம் காலம் கற்றுத் தந்த அனுபவம் என்பார். சுள்ளான் ஆக சுற்றிக் கொண்டு இருந்தவர், காலம் அவரை மேம்படுத்தி நடிப்பு அசுரனாக மாற்றியுள்ளது. துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமான தனுஷ், சிறுவயதில் செஃப் ஆகவே விருப்பட்டு இருக்கிறார். ஆனால், காலம் அவரை நடிகராக்கி விட்டது. தற்போது தனது 50வது படத்தை நடித்து இயக்கி வருகிறார்.
-
Captain Miller teaser https://t.co/Ia9LhOeLyY
— Dhanush (@dhanushkraja) July 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Captain Miller teaser https://t.co/Ia9LhOeLyY
— Dhanush (@dhanushkraja) July 27, 2023Captain Miller teaser https://t.co/Ia9LhOeLyY
— Dhanush (@dhanushkraja) July 27, 2023
மேலும், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' என்ற படத்தில் நடித்துள்ளார். தனுஷின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக 'கேப்டன் மில்லர்' படக்குழுவினர் இத்திரைப்படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளனர். தற்போது கில்லர் கில்லார் த கேப்டன் மில்லர் என வெளியாகிய இப்படத்தின் ட்ரைலர் இணையத்தில் ஒரு கலக்கு கலக்கி வருகிறது. மேலும் இந்தியில் 'தேரே இஷ்க் மெய்ன்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: ’என் மண் என் மக்கள்’ பாதயாத்திரையை தொடங்கி வைக்க அமித்ஷா தமிழகம் வருகை!