தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பட்டியலில் முக்கிய இடத்தில் இருப்பவர் தான், நடிகர் தனுஷ். தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என அனைத்துத்திரையுலகத்திலும் கால் பதித்து சாதனைப்படைத்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யாவிற்கும் இடையே இருந்த திருமண உறவு முறிவு பெற்றது.
'நாங்கள் நல்ல நண்பர்களாகத்தொடர்வோம்..!' என தனுஷ் இணையத்தில் அறிவித்தார். இதனையடுத்து, இவர்களின் இந்த விவாகரத்து பல பேரால் வரவேற்கவும், விமர்சிக்கவும் பட்டது. இந்நிலையில், தற்போது தங்கள் மகனின் பள்ளி விழாவில் கலந்துகொண்ட இவர்கள் தங்கள் மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தப் புகைப்படத்தில் நடிகர் தனுஷ், அவரது முன்னாள் மனைவி ஐஸ்வர்யா, இவர்களது மகன்கள் யாத்ரா, லிங்கா மற்றும் பாடகர் விஜய் யேசுதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் இடம்பெற்றுள்ளனர். நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.