துல்கர் சல்மான் நடித்துள்ள சீதா ராமம் படத்தின் வெற்றி விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் லைகா புரொடக்சன்ஸ் சார்பில் தமிழ்குமரன், துல்கர் சல்மான், இயக்குனர் அனு ராகவபுடி, இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அனு ராகவபுடி, நான் உதவி இயக்குனராக இருக்கும்போது நான் பார்த்த ஒரு விஷயத்தை கொஞ்சம் மாற்றி இக்கதையை எழுதினேன். ரோஜா திரைப்படம் நான் இக்கதையை எழுதும் போது உதவியாக இருந்தது. காதல் கோட்டை மற்றும் ரோஜா இரண்டு படத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை. காதல் கோட்டை படத்தில் இருவரும் கடிதம் எழுதிக் கொள்வார்கள் இறுதியில் இருவரும் சந்தித்துக் கொள்வார்கள். சந்திப்பு தான் அப்படத்தின் முக்கிய கரு. ஆனால் இதில் அப்படி அல்ல" என்றார்.
பின்னர் பேசிய துல்கர் சல்மான், "இப்படத்தை பார்த்துவிட்டு நிறைய பேர் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர். அழிந்து போன கடிதம் எழுதும் பழக்கத்தை இப்படம் மீண்டும் ஞாபகப்படுத்திவிட்டது. தொடர்ந்து நல்ல படங்களில் நடிப்பேன்.
ஒரு நடிகனாக நிறைய வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை. மலையாளத்தில் அதுபோன்ற கதாபாத்திரங்கள் வருகிறது. ஆனால் தமிழ் மற்றும் தெலுங்கில் அப்படி கிடைப்பதில்லை. காதல் படங்களாகவே வருகிறது.
ஐக்கிய அமீரகத்தில் இப்படம் வெளியாகிறது. ஆரம்பத்தில் ரிலீஸ் ஆகவில்லை.
நான் இதுவரை காஷ்மீர் சென்றதில்லை. இப்படத்திற்காக சென்றபோது நல்ல அனுபவமாக இருந்தது.
எனது படம் வெற்றிபெற்றால் அப்பா கதை கேட்டதாக சொல்கிறார்கள். தோல்வி அடைந்தால் நான் கதை கேட்டதாக சொல்கிறார்கள். இப்படம் வெற்றி பெற்றுவிட்டது எனவே அப்பா கதை கேட்டதாகவே நினைத்துக்கொள்ளுங்கள்.
மணிரத்னம் படத்தில் நடிக்கும்போது ஒரு மாணவனாகத்தான் இருந்தேன். அவருடன் பேசும்போதும் படபடப்பாக இருப்பேன். அவருடைய மிகப்பெரிய ரசிகன் நான்" என்றார்.
இதையும் படிங்க : திரையரங்குகளில் வெளியான விருமனுக்கு மக்கள் வரவேற்பு