சென்னை: இயக்குநர் ஜெயக்குமார் லாரன் இயக்கியுள்ள அற்றைத் திங்கள் அந்நிலவில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று(அக்-8)நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவரும் பட்டிமன்ற பேச்சாளருமான திண்டுக்கல் லியோனி, தயாரிப்பாளர் தனஞ்செயன், நடிகர் பாபு ஆண்டனி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய திண்டுக்கல் லியோனி, ‘இப்படத்தின் இயக்குநர் ஜெயக்குமார் லாரன் எனது பள்ளி மாணவர். எனது மாணவர் இயக்கிய படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு நான் வந்தது மகிழ்ச்சி. யாருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்காது. இலக்கியத்தில் இருந்து இப்படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த லியோனி, ‘இந்து தொடர்பான சர்ச்சை சமீபத்தில் நிறைய வந்துள்ளது. இதுகுறித்து பதில்களும் நிறைய வந்துள்ளது. இப்போது பொன்னியின் செல்வன் படத்தை பற்றி பேசக் கூடாது. அது கல்கியின் புனையப்பட்ட நாவல். அப்போது இருந்த காப்பியத் தலைவர்களை வைத்து கல்கி எழுதியுள்ளார். அதில் வருபவர்கள் இந்துவா, முஸ்லிமா என்ற விவாதம் தற்போது தேவையில்லை.
கல்கியின் இலக்கிய திறனையும் அதனை மணிரத்னம் எப்படி எடுத்துள்ளார் என்பதையும் பார்த்து ரசிக்க வேண்டும். இதனை ஆராய வேண்டாம் . அப்படி ஆராய்ந்தால் எந்தவொரு கலைப் படைப்பையும் ரசிக்க முடியாது. எந்தவொரு கலைப் படைப்பு வந்தாலும் அதற்கு சாதி சாயம், மதச் சாயம் பூசுவது அதனை கொச்சைப்படுத்துவதாகும். படத்தை ரசிப்பது தான் ரசிகனின் கடமை. நானும் ஒரு ரசிகனாக அப்படத்தை ரசித்தேன்.
ஒரு இயக்குநர் தனக்குள்ள உள்ளுணர்வை படத்தில் கொண்டு வருவது எந்த தவறும் இல்லை. பாடங்களில் தொடர்ந்து தாழ்த்தப்பட்டவர்கள் குறித்து கேள்விகள் கேட்கப்படுவது பற்றி எதுவும் எனது கவனத்திற்கு வரவில்லை. தனிப்பட்ட நபர்களின் கருத்துக்கு கருத்து சொல்ல நான் விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ராஜாராஜ சோழன் விவகாரம் தேவை இல்லாத விஷயம் - கஞ்சா கருப்பு