சென்னை: 'அடிதடி', 'மகா நடிகன்', 'ஜன்னல் ஓரம்', 'குஸ்தி', 'பாஸ்கர் தி ராஸ்கல்' போன்ற பல படங்களை தயாரித்த கே. முருகன், எம்.எஸ். மூவீஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிக்கும் புதிய படம் "நாகா". இதனிடையே முருகன் பிரபுதேவா, மகிமா நம்பியார் நடிக்கும் 'கருட பஞ்சமி' படத்தை தயாரித்து வருகிறார். நாகா படத்தில், நாக அம்மனான மானசா தேவி பக்தையாக பிந்துமாதவி நடிக்கிறார்.
இதே போல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரெய்சா வில்சனும் இன்னொரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அத்துடன் நடிகர் ஶ்ரீகாந்த் தொல்லியல் ஆராய்ச்சியாளராக நடிக்கிறார்.
மேலும், கருணாகரன், அறிமுகம் விஜய் நெல்லிஸ், மும்பை நடிகர் ரிகின் சாய்கல் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தில் புராணங்களில் சொல்லப்படுகிற நாகலோகத்தை கிராபிக்ஸ் மூலம் பிரமாண்டமாக காட்டவிருக்கிறார் டைரக்டர் சார்லஸ்.
இவர் 'நஞ்சுபுரம்', 'அழகு குட்டி செல்லம்' போன்ற வித்தியாசமான படங்களை இயக்கியவர். கிராபிக்ஸ் காட்சிகளுக்காக மட்டுமே 3 கோடி செலவிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்லாயிரம் பெண்களின் வாழ்வை சீரழித்த, அநீதியின் மொத்த உருவமாகத் திகழும் ஒரு தீயவனை, ஒரு பெண் தெய்வம் அவதாரமெடுத்து வந்து அழித்து ஒழிப்பதே "நாகா" படத்தின் ஒன்லைன்.
இந்தப்படத்தின் பூஜை, நேற்று(ஏப்ரல்.16 ) நடந்தது. இதில் நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் கலந்து கொண்டனர். வருகிற 27ஆம் தேதி முதல் பாண்டிச்சேரியில் படபிப்பு ஆரம்பமாகிறது. இதை தொடர்ந்து, ஹம்பி, கேரளாவில் 55 நாட்கள் படப்பிடிப்பு நடை பெறுகிறது.
இதையும் படிங்க: பார்வையற்றோரும் பார்க்கும் வகையில் உருவாகியிருக்கும் 'மாயோன்’