சென்னை: இயக்குநரும் நடிகருமான சசிகுமார் தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளவர். நட்பு, குடும்பங்கள் சார்ந்த படங்களை நடித்து பெயர் பெற்றவர். இவரது இயக்கத்தில் வெளியான சுப்பிரமணியபுரம் பெரிதாக பேசப்பட்டது. இந்தி சினிமா இயக்குநர்கள் வரை சுப்பிரமணியபுரம் திரைப்படம் சென்றடைந்தது. அதன் பிறகு பல படங்களை தயாரித்தும் இயக்கியும் வந்த சசி குமாருக்கு சொல்லிக்கொள்ளும்படியான பெரிய வெற்றிகள் ஏதும் கிடைக்கவில்லை.
இந்த நேரத்தில்தான் அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசி குமார் 'அயோத்தி' என்ற படத்தில் நடித்தார். இப்படத்தில் இந்தி நடிகர் யஷ்பால் சர்மா, பிரியா அஸ்ராணி, புகழ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு என்ஆர் ரகுநந்தன் இசை அமைத்திருந்தார். ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்துள்ளார். இப்படம் கடந்த 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மனிதநேயம் மற்றும் மத நல்லிணக்கம் பற்றி பேசிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இப்படம் மூன்றாவது வாரம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்த நிலையில், இன்று(மார்ச்.19) அயோத்தி படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது. இதில், சசி குமார், தயாரிப்பாளர் ரவீந்திரன், இயக்குநர் மந்திரமூர்த்தி உள்ளிட்டப் படக்குழுவினர் பங்கேற்றனர்.
அப்போது, படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் மந்திர மூர்த்திக்கு நடிகர் சசிகுமார் தங்கச்சங்கிலி அணிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சசிகுமாருக்கு அயோத்தி வெற்றிப் படமாக அமைந்துள்ளது. அயோத்தி படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுவரை தமிழ் சினிமாவில் வராத கதைக்களத்தை தேர்வு செய்து இயக்குநர் மந்திரமூர்த்தி திரையில் மாயாஜாலம் நடத்தியிருந்தார் என விமர்சகர்கள் பாராட்டித் தள்ளினர். நாயகி இல்லாமல் கதையின் நாயகனான சசிகுமார் சிறப்பான நடிப்பை அளித்திருந்தார். இப்படத்தில் எல்லா கதாப்பாத்திரங்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தன.
ஆணாதிக்க மனநிலை கொண்ட தீவிர ராம பக்தரான பல்ராம் அயோத்தியிலிருந்து தனது குடும்பத்துடன் தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரத்திற்குச் செல்கின்றனர். மதுரைக்கு வந்த அக்குடும்பம் வாடகைக் காரில் ராமேஸ்வரத்திற்கு செல்லும்போது, வழியில் விபத்து ஏற்படுகிறது. விபத்தில் பல்ராமின் மனைவி இறந்து போகிறார். மனைவியின் உடலை பிரேதப்பரிசோதனை செய்யாமல் எடுத்துச் செல்ல வேண்டும் என பல்ராம் பிடிவாதம் பிடிக்கிறார். இவர்களுக்கு நாயகன் சசிகுமார் உதவுகிறார். இவர்கள் சடலத்தை கொண்டு சென்றார்களா? உதவிக்கு வந்த நாயகனுக்கு என்ன நடந்தது? என்பதுதான் அயோத்தி படத்தின் கதை. மதம், இனம் உள்ளிட்டவற்றைக் கடந்து மனிதநேயத்தை போற்றும் வகையில் இப்படம் அமைந்துள்ளது.