சென்னை: இசைப்புயல் என்றழக்கைப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது 56வது பிறந்தநாளை இன்று (ஜன.6) கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளுக்கு திரையுலக பிரபலங்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதேபோல உலகம் முழுவதும் உள்ள இவரது ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்கள் மூலம் பதிவிட்டுவருகின்றனர். ஏ.ஆர்.ரகுமானின் அனைத்து பாடல்களும் ரசிகப்பட்டாலும், அவரது சில பாடல்கள் என்றுமே மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன.
சின்ன சின்ன ஆசை.. அதிகமான இசைக்கருவிகள் இல்லாமல், இசை யுக்திகளை மட்டுமே வைத்து பாடலின் வரிக்கு செறிவூட்டிருந்தார், ரகுமான். அதுதான், நாம் வறண்ட நிலத்தில் இருந்தாலும், வற்றாத பனியாற்றில் ஆழ்த்தும் ‘சின்ன சின்ன ஆசை பாடல்..’. 1992ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ரோஜா’ படத்தில் இடம் பெற்ற இப்பாடல், பாடல் கலைஞர்களுக்கு பயிற்சிப் பாடலாக அமைந்தது. அதேநேரம் பாடலின் மெல்லிசைக்கு ஏற்ற காட்சியமைப்பு, பாடலின் ரசனையை பெரும் அளவில் அதிகப்படுத்தியது.
ஆத்தங்கரை மரமே.. கிட்டார் மற்றும் புல்லாங்குழலால் புத்துணர்ச்சி ஊட்டும் இப்பாடல் இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் 1993ஆம் ஆண்டு வெளியான ‘கிழக்குச் சீமையிலே’ படத்தில் இடம் பெற்றது. ரகுமானில் இசையில் கிராமத்து தென்றல் வீசாது என்ற விமர்சனத்தை, இந்த பாடல் மூலம் உதறி எரிந்தார் அவர். அது மட்டுமல்லாமல், தன்னைப்பற்றிய விமர்சனங்களுக்கு இன்றும் பூப்புனித நீராட்டு விழாவில், ‘மானூத்து மந்தையிலே..’ என்ற பாடலின் மூலம் பதில் சொல்லிக் கொண்டே வருகிறார் என்றால், அது மிகையல்ல.
தங்கத்தாமரை மகளே.. 1997ஆம் ஆண்டு ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான ’மின்சார கனவு’ படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும், ஏ.ஆர்.ரகுமானுக்கு ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்க துணையாக இருந்தது. ஏனென்றால், இந்த படத்தில் இடம் பெற்றிருந்த ‘பூ பூக்கும் ஓசை.., அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே.., ஸ்டார்வ்பெரி.., வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா..’ என அனைத்து பாடல்களும் இளைஞர்களின் காதல் அம்புகளை இசையால் எய்ய வைத்தது. அப்படியான காதல் மெல்லிசையை இப்படத்தின் பாடல்கள் மூலம் ஏ.ஆர்.ரகுமான் வழங்கினார். அதிலும் தங்கத்தாமரை மகளே இப்போதும் நீங்கவில்லை.
தக்க தய்ய தய்ய தய்யா.. இந்தியில் ‘தில் சே’ என்றும், தமிழில் ‘உயிரே’ என்றும் வெளியான இப்படத்தின் பாடல்களுக்கு ஆடாதவர்களும் கிடையாது. அடிபணியாதவர்களும் கிடையாது. அதிலும், 90ஸ் கிட்ஸ்களின் முதல் ஸ்மார்ட் மொபைலான 20 ரூபாய் பொம்மை மொபைலில் அதிகம் ஒலித்த பாடலும் இதுதான். அந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிலும், ‘நெஞ்சினிலே.. நெஞ்சினிலே மற்றும் பூங்காற்றிலே..’ ஆகிய பாடல்களும் ரகுமானை இசை உணர்வுகளால் ரசிக்க வைத்தது.
இப்படியான மாறுபட்ட இசையினால் ஆஸ்கர் விருது வரை பெற்ற இசைக்கலைஞனுக்கு, எப்போதும் ‘எல்லா புகழும் இறைவனுக்கே..’ என்ற ஒன்று மட்டும்தான் நம்பிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: புடவையில் நடிகை ஆத்மிகாவின் அழகான கிளிக்ஸ்!