சினிமாவைக்காட்சிமொழியாக அணுகுவது என்பது மிக முக்கியாமனதொன்று. அது எல்லா திரைப்படங்களிலும் அவ்வளவு எளிதாக அமைந்துவிடுவதும் இல்லை. குறிப்பாக டிராமா ஜானர் திரைப்படங்களிலும், வசனங்கள் அதிகளவில் தேவைப்படும் படங்களிலும் இதைக் கையாள்வதற்கு ஆளமான திரைமொழித்திறன் தேவைப்படும்.
![காட்சிக்கூராய்வு : ’ஓர் உன்னதமான துரோகம்..!’](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16101152_1.jpeg)
அதில், கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான ஃபிரெஞ்ச் திரைப்படமான ‘The Worst person in the world' திரைப்படம் மிக முக்கியமான திரைப்படமாகக் கருதலாம். இலக்கற்ற ஓர் இளம்பெண்ணின் வாழ்வை தனித் தனி சாப்டர்களாக திரைக்கதை அமைத்து அந்த ஆண்டின் மிகச்சிறந்த திரைப்படமாகப் படைத்திருக்கிறார் இயக்குநர், ஜோசிம் ட்ரையர்.
![காட்சிக்கூராய்வு : ’ஓர் உன்னதமான துரோகம்..!’](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16101152_3.jpeg)
எந்த தர்க வாதத்திற்கும், கருத்தியல்களுக்கும் அடங்காமல் முழுக்க முழுக்க ஓர் பெண்ணின் மனநிலையில் அவள் சந்திக்கும் சம்பவங்கள் மற்றும் மனிதர்களை வைத்துப் பின்னிய கதை தான் இது. பெரும்பாலும், இந்தப் படத்தின் மையக் கதாபாத்திரமான ‘ஜூலி’-யைப் போல் பல இலக்கற்ற மனிதர்களை நாம் கண்டிருப்போம்.
![காட்சிக்கூராய்வு : ’ஓர் உன்னதமான துரோகம்..!’](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16101152_5.jpeg)
ஏன் நம்மிலும் அப்படி ஓர் ஜூலி மறைந்திருப்பாள். நாம் நமக்குச் சொல்லப்பட்ட கதைகளில், இதிகாசங்களில், பல திரைப்படங்களிலும் கூட வெற்றி பெற்றவர்களையும், லட்சியவாதிகளையுமே கதையின் நாயகர்களாக, நாயகிகளாகக் கண்டு பழகிவிட்டோம். ஆனால், நிஜவாழ்க்கையில் பெரும்பாலானோர் இலக்கற்ற போக்கில் தானே வாழ்கிறார்கள்..?, இவ்வுலகம் வகுத்திருக்கும் வெற்றிகரமான வாழ்க்கையை வாழாமல் தானே இருக்கிறார்கள்..?
![காட்சிக்கூராய்வு : ’ஓர் உன்னதமான துரோகம்..!’](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16101152_2.jpeg)
இந்தக் கதையின் நாயகியான ஜூலி அப்படி ஒரு இலக்கற்றப்பெண் தான். ஆனால், இவள் ஆட்டு மந்தைகளுக்குள் திரிபவள் இல்லை. லௌகீக வாழ்க்கையைப்பற்றிய பெரும் அக்கறையற்ற ஓர் விந்தை மங்கை. இந்தப் படத்தின் பல காட்சிகளை ஓர் சிறந்த காட்சிக்கான அடையாளமாக நாம் எடுத்துக்காட்டலாம்.
![காட்சிக்கூராய்வு : ’ஓர் உன்னதமான துரோகம்..!’](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16101152_4.jpeg)
அவை அனைத்தும் அந்த ஆண்டில் வெளியான திரைப்படங்களிலேயே மிகச்சிறந்த காட்சிகள். அதில் மிக முக்கியமான காட்சிகளாக இதில் ஓர் காட்சியை நான் கூறுவேன். இந்தப் படத்தில் ‘Cheating' எனும் சாப்டரில் வரும் காட்சி.
![காட்சிக்கூராய்வு : ’ஓர் உன்னதமான துரோகம்..!’](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16101152_7.jpeg)
இந்தப் படத்தின் கதாநாயகியான ஜூலியின் காதலன் ஓர் பிரபலமான காமிக்ஸ் எழுத்தாளர். ஒரு நாள் அவன் ஓர் பார்ட்டியில் தன் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களுடன் அதிகமாக உரையாட, அந்தக் கணம் ஜூலியினுள் எங்கோ ஓரத்தில் இருந்த தனிமை எனும் இருளை அவளினுள் எங்கும் பரவச்செய்கிறது.
![காட்சிக்கூராய்வு : ’ஓர் உன்னதமான துரோகம்..!’](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16101152_6.jpeg)
அதிலிருந்து மீள அந்த கணத்திலிருந்து தப்பித்து நடக்க ஆரம்பிக்கிறாள், ஜூலி. வெகுதூரம் நடக்கிறாள்..., அந்தக் கணத்தின் இருள் தன்னை நீங்கும் தொலைவு வரையில் நடக்கிறாள். அதன் பின் ஓர் உயரிய மேட்டில் உட்கார்ந்து கீழ் உள்ள நவநாகரிக நகரத்தைக் காண்கிறாள். அவளுக்கு அந்த நகரமும் அவள் தனிமையினால் பாலையாய் காட்சித் தந்திருக்கக்கூடும். தனிமையே வறண்ட அந்த பாலையில், அவளினுள் தேவைப்பட்டதோர் சோலைவனம்.
![காட்சிக்கூராய்வு : ’ஓர் உன்னதமான துரோகம்..!’](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16101152_10.jpeg)
அப்போது, ஓர் வீட்டில் பார்ட்டி நடப்பதைக் காண்கிறாள். ஆள் அடையாளம் தெரியாதவர்களின் பார்ட்டியில் அவளும் கலந்துகொள்கிறாள். அப்போது தான் அவளின் சோலைவனமான ‘எய்விண்ட்’ எனும் நபரை சந்திக்கிறாள். இருவருக்கும் பரஸ்பர ஈர்ப்பும் வந்துவிடுகிறது.
![காட்சிக்கூராய்வு : ’ஓர் உன்னதமான துரோகம்..!’](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16101152_8.jpeg)
ஆனால், இருவருக்கும் ஏற்கெனவே காதலர்கள் உண்டு. இப்போது, இவர்களின் ஈர்ப்பை வெளிப்படுத்துதல் அவர்கள் தங்களின் காதலர்களுக்குச்செய்யும் துரோகம் ஆகிவிடலாம். இருப்பினும், இன்பத் தேனாய் ஊறி வழியும் ஈர்ப்பை வெளிப்படுத்தாமல் எப்படி இருப்பது..?. அப்போது இருவரும் சேர்ந்து தங்களின் நெருக்கத்தை பரஸ்பரமாகக் காட்ட ஒரு வழி யோசிக்கின்றனர்.
![காட்சிக்கூராய்வு : ’ஓர் உன்னதமான துரோகம்..!’](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16101152_9.jpeg)
தனியாக உரையாடுவது, ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வது, சிகரெட் புகைப்பது, தனியாக நடப்பது என இவர்கள் நெருக்கத்தை வெளிப்படுத்த செய்த எந்த செயலும், இந்த உலக கோட்பாடுகளின் படி நெருக்கமாகவோ, துரோகமாகவோ கருதப்படுவதில்லை.
![காட்சிக்கூராய்வு : ’ஓர் உன்னதமான துரோகம்..!’](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16101152_11.jpeg)
ஆனால், அந்தக் கோட்பாடுகள் கூறும் நெருக்கங்களை விட இவர்கள் நெருக்கமாக செய்த காரியங்கள் எவ்வளவு உன்னதமான நெருக்கமென்பதை இந்தக்காட்சியைப் பார்க்கும்போது நம்மால் நிச்சயம் உணரமுடியும். இப்படியாக அடுத்த நாள் பொழுது விடிய, இவர்கள் இருவரும் விடைபெறும் நேரம் வருகிறது. அப்போது தான் எய்விண்ட், ஜூலியின் பெயர் என்னவென்றே கேட்கிறான்.
ஆம், உன்னதமான உரையாடல்களில் வழக்கமான வழிமுறைகளெல்லாம் அடங்காது. பதிலுக்கு அவன் பெயரை ஜூலியிடம் சொல்ல முயலும் போது தடுக்கும் ஜூலி, ‘பெயர் சொல்ல வேண்டாம், பின் உன்னை ஃபேஸ்புக்ல தேட ஆரம்பிச்சிருவேன்’ எனக் கூறிவிட்டு இருவரும் சாலைகளின் இருவேறு பாதைகளில் இருவர் விடைபெறும் போது, எய்விண்ட் ஜூலியுடம், ‘நம்ம துரோகம் செய்யல தான..?’ என ஒருமுறை அவளிடமே உறுதிப்படுத்திக்கொள்கிறான்.
’இல்வே இல்லை..!’ என ஜூலி கூறி, பின் இருவரும் விடைபெறுவதாய் இந்தக் காட்சி நிறைவுபெறுகிறது. இப்படி ஒரு உன்னதமான துரோக காட்சியை எந்த சினிமாவிலும் எளிதில் காண இயலாது. இந்தக் காட்சி, காட்சியமைக்கப்பட்ட விதம், இசை, நடிகர்களின் நடிப்பு, படத்தொகுப்பு என அனைத்தும் புதுவித உணர்வை நம்முள் கடத்தும்.
துரோகம் எனும் உணர்வை இந்த கோணத்தில் காட்டியதே ஓர் அலாதியான சிந்தனை தான். ஆகமொத்தத்தில் உலகத்தின் துரோக வகைப்பாடுகளில் இருந்து தப்பித்த உன்னதமான துரோகிகள் நம்முள் ஓர் சிறிய பேரின்ப உணர்வைக் இக்காட்சியில் கடத்திவிட்டுச்செல்வார்கள்.
இதையும் படிங்க: 3 ஐயன் x சூது கவ்வும்: திரைக்குறுக்கேற்று