இயக்குநர் சந்துரு முருகானந்தம் இயக்கத்தில் புதுமுக நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள 'NOT REACHABLE ' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் அரங்கில் நடைபெற்றது. இதில், இயக்குநர் சந்துரு முருகானந்தம் , தயாரிப்பாளர் கே.ராஜன் , படத்தின் கதாநாயகிகள் சுபா , சாய் தன்யா பங்கேற்றனர்.
அதில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், “சினிமாவைக் காப்பாற்றுவது சிறிய தயாரிப்பாளர்கள் தான். பெரிய தயாரிப்பாளர்களும் , பெரிய கதாநாயகர்களும் பிழைப்பிற்காக சினிமாவில் இருக்கின்றனர். சினிமா துறைக்கு துரோகம் செய்கின்றனர். நடிகர்கள் என்றாலே ஜம் என்று குளு குளு காரில் வருவது , கேரவன் ஏசியில் உட்கார்ந்து கொண்டு சீட்டாடி குஜால் செய்கிறார்கள். நீங்க எவன் வீட்டு காசில் கேரவன்ல இருக்கீங்க..? 1 மணி நேரத்திற்கு சிறிய படத்திற்கு ரூ.20-30 ஆயிரம் செலவாகிறது.
கதாநாயகர்களுக்கு விரோதிகள் அதிகம் இருக்கின்றனர் போல.. அதனால்தான் பவுன்சர்களை வைத்து கொள்கின்றனர். கதாநாயகர்களெல்லாம் பயங்கரவாதிகளாக இருந்து பின்பு சினிமாவில் நடிக்க வந்திருப்பார்கள் போல.. அதனால்தான் இவ்வளவு பாதுகாப்பா..? சிறு படத்தயாரிப்பாளர்கள் படம் எடுக்கும்போதே , வெளியிடுவதற்குத் தேவையான பணத்தையும் வைத்துக் கொள்ள வேண்டும்.
மைனா படத்தை 50 முறை வெளியீட்டாளர்களிடம் போட்டுக்காட்டினர். ஆனால் யாருக்குமே பிடிக்கவில்லை என்று கூறிவிட்டனர். பிறகுதான் ரெட் ஜெயன்ட் உதயநிதியைப் பார்த்து கோரிக்கை வைத்தனர். உதயநிதிக்கு படம் பிடித்ததால் 10 விழுக்காடு கமிசன் மட்டும் வாங்கிக்கொண்டு வெளியிட்டனர். மிகப்பெரிய வெற்றியை அந்தப்படம் பெற்றது.
டி.ராஜேந்தரின் ஒருதலை ராகம் படத்தை 200 முறை போட்டுக்காட்டினர். யாரும் வாங்கவில்லை. பிறகு தயாரிப்பாளரே வெளியிட்டார். பெரியளவில் ஓடியது” எனப் பேசினார்.