சென்னை: 500 கோடி முதலீட்டில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆதி புருஷ்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் பிரபாஸ் உடன் கிருத்தி சனோன், சன்னி சிங், சயீஃப் அலி கான், தேவதத்தா நாகே உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.
பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரபாஸ் இந்திய சினிமாவின் முக்கிய நடிகராக மாறியுள்ளார். ஆனால் அதனைத் தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது. பாகுபலி வெற்றியால் பிரபாஸை வைத்து முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் சுமார் 1500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படங்களை தயாரித்து வருகின்றனர்.
அதில் ஒரு படம் தான் ஆதிபுருஷ். ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. ஆனால் படத்தின் ட்ரெய்லர் வெளியான போது கிராபிக்ஸ் நகைப்புக்கு உள்ளானது. இதனால் ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருந்த படக்குழு ரிலீஸ் தேதியைத் தள்ளிவைத்தது. பின்னர் மீண்டும் கிராபிக்ஸ் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் அது ரசிகர்களுக்கு திருப்திகரமாக இல்லை.
இந்த நிலையில் படம் வெளியாகும் திரையரங்குகளில் அனுமனுக்கு ஒரு இருக்கை ஒதுக்க வேண்டும் என்று படக்குழுவினர் கேட்டுக்கொண்டனர். இதனை அடுத்து இன்று படம் வெளியான பெரும்பாலான திரையரங்குகளில் அனுமனுக்கு ஒரு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று படம் வெளியான நிலையில் இந்தியாவில் பல இடங்களில் திரையரங்குகளில் அனுமனுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டு அதற்கு பூஜைகள் செய்யப்பட்டன.
மும்பையில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற காட்சியில் அனுமன் இருக்கைக்குப் பூஜைகள் செய்யப்பட்டன. மேலும் ஒரு திரையரங்கில் படம் ஓடிக்கொண்டிருக்கும் போது குரங்கு ஒன்று வந்து படம் பார்த்தது. இதனை கண்ட ரசிகர்கள் ’ஜெய் ஹனுமான்’ என்று கோஷமிட்டனர்.
இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆதிபுருஷ் படத்திற்கு வரவேற்பு இருந்தாலும் தமிழ்நாட்டில் டிக்கெட் விற்பனை சற்று குறைவாகவே இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. மற்ற மாநிலங்களில் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
படம் வெளியிடப்பட்ட திரையரங்குகளில் ரசிகர்கள் அனுமன் சிலையை எடுத்து வந்து கோஷமிட்டு பூஜைகள் செய்து கொண்டாடி வருகின்றனர். இதனால் படத்துக்கு மிகப் பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது. மேலும் முதல் நாள் வசூலில் ஆதி புருஷ் படம் சாதனை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: Baba black Sheep: இசை வெளியீட்டு விழாவில் முன்னணி திரைப்பிரபலங்கள் அளித்த நெகிழ்ச்சி சம்பவம்