சென்னை: வேதிகாவின் அதிரடி ஆக்ஷன் மற்றும் சாகசங்களுடன் உருவாகும் தமிழ் பான் இந்தியா படம் ‘கஜானா’. இதில், இனிகோ பிரபாகர், யோகி பாபு உட்பட பலரும் நடித்துள்ளனர். ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றும் பான் இந்தியா படமாக ‘கஜானா’-வின் கதையம்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
‘வீரப்பனின் கஜானா’ என்ற தலைப்பில் வளர்ந்து வந்த இப்படம் தற்போது ‘கஜானா’ என்ற பெயர் மாற்றத்துடன் பான் இந்தியா திரைப்படமாக உருவாகிறது. தமிழில் விநோதன், முனி, மலை மலை, சக்கரகட்டி, காஞ்சனா 3, காவியத்தலைவன், பரதேசி, காளை உள்ளிட்ட படங்களில் நடித்த வேதிகா முதன்முதலாக பான் இந்தியா திரைப்படத்தில் நடித்துள்ளார். இது மட்டுமில்லாமல் காமெடி நடிகராகவும், கதையின் நாயகனாகவும் பல ஹிட் படங்களை கொடுத்து வரும் யோகி பாபு இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இத்திரைப்படம் ‘இண்டியானா ஜோன்ஸ்’, ‘நேஷனல் டிரஸ்சர்’ போன்ற சாகச ஹாலிவுட் படங்களுக்கு இணையான, மாய மந்திர காட்சிகள் நிறைந்ததும் யானை, புலி, பாம்பு போன்ற மிருகங்களின் சாகசக் காட்சிகளோடும் மிக பிரம்மாண்டமான சாகச திரைப்படமாக உருவாகிறது என்று கூறுகின்றனர். இனிகோ பிரபாகர், சாந்தினி, யோகி பாபு, பிரதாப் போத்தன், வேலு பிரபாகரன், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் (Four Squar Studios) நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, எழுதி பிரபாதிஸ் சாம்ஸ் இயக்குகிறார். VFX தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாகியுள்ள இப்படத்தில், பிரபல ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்ற இருக்கிறார்கள். இவர்களைப் பற்றிய முழு விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.
இதையும் படிங்க: "சிறந்த சினிமாக்கள் மூலம் உங்களை தொடர்ந்து என்டர்டெய்ன் செய்வேன்" - கமல்ஹாசன்