சென்னை: நடிகை ஷாலினியின் தங்கை நடிகை ஷாம்லி. இவர் பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். சிறந்த நடிப்பிற்கான தேசிய விருதை பெற்றவர், பேபி ஷாம்லி. நாயகியாகவும் சில படங்களில் நடித்துள்ளார். ஷாம்லி நடிப்பில் மட்டுமல்லாமல் நடனம் மற்றும் ஓவியக் கலையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். குறிப்பாக, ஓவியத்தில் அதிகப்பற்று கொண்ட ஷாம்லி, ஏராளமான ஓவியங்களை வரைந்துள்ளார்.
இவரது படைப்புகளில் பெண்கள் தங்களது தடைகளில் இருந்து விடுபடுவது போலவும், சுதந்திரமாக தங்களது திறமைகளை வெளிப்படுத்துவது போலவும் காண்பித்திருப்பார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு, பெங்களூருவிலுள்ள சித்ரகலா பரிஷத் எனும் கலைக்கூடத்தில் தனது ஓவியப் படைப்புகளை கண்காட்சியாக வைத்தார். அதேபோல் 2022ஆம் ஆண்டு சென்னையிலுள்ள வெண்பா கேலரி எனும் கலைக்கூடத்தில் தன்னுடைய ஓவியங்களை காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இந்த நிலையில், அண்மையில் ஷாம்லி துபாயில் உள்ள 'வேர்ல்ட் ஆர்ட் துபாய்' எனும் சர்வதேச ஓவிய கலைக் கூடத்தில் தனது ஓவியங்களை பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தி இருக்கிறார். இந்த கலைக்கூடத்தில் உலகம் முழுவதும் 60 நாடுகளிலிருந்து 300-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்களுடைய படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர். இதில் ஷாம்லியின் படைப்புகளை பார்த்து பலரும் பாராட்டியதாகத் தெரிகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், திரைத்துறையினர், நெட்டிசன்கள் எனப் பலரும் ஷாம்லியை பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: 100வது நாளை கடந்து வெற்றிநடை போடும் 'துணிவு'