சென்னை: யோகி பாபு என்ற ஒரு பெயர் இன்று தமிழ் சினிமாவில் புகழின் உச்சியில் உள்ளது. ஆனால், இந்தப் புகழை அடைய யோகி பாபு அனுபவித்த துயரங்கள், ஏமாற்றங்கள், அவமானங்கள் அதிகம். சின்னத்திரையில் இருந்து வந்து தற்போது தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறக்கும் சந்தானம், சிவகார்த்திகேயன் வரிசையில் வந்தவர்தான் யோகி பாபுவும். சந்தானத்தை போலவே இவருக்கும் 'லொள்ளு சபா' தான் விலாசம். அதில் உதவி இயக்குநராக பணியாற்றி சில காட்சிகளிலும் நடித்து வந்தார். அப்போதே யோகி பாபுவின் முகத்தை பார்த்து பலரும் கிண்டல் செய்துள்ளனர்.
‘என்னடா மூஞ்சி இது இதெல்லாம் வியாபாரம் ஆகாது’ என்று படத்தில் வரும் வசனம் போல யோகி பாபுவை பார்த்து பலரும் பேசியுள்ளனர். ஆனாலும் மனம் தளராத யோகி பாபு பல்வேறு படக் கம்பெனிகளை ஏறி இறங்கி உள்ளார். அப்போது 2009ஆம் ஆண்டு இயக்குநர் சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் அமீர் நடித்த யோகி படத்தில் வாய்ப்பு பெற்றார். பின்னாளில் அப்படமே இவரது அடையாளம் ஆனது. யோகி பாபு என்ற கலைஞன் உருவாக காரணமாக இருந்தது.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு நகைச்சுவை நடிகரின் ஆதிக்கம் ஓங்கி இருக்கும். அப்படியே அது அந்த நடிகரின் ஹீரோ ஆசை, மற்ற பிற விஷயங்களால் உச்சத்தில் இருந்த நடிகர் அப்படியே தனது ஆதிக்கத்தை இழந்து இல்லாமல் போய் விடுவார். நாகேஷ் தொடங்கி கவுண்டமணி, வடிவேலு, சந்தானம் வரை இதே நிலை தான் இப்போது வரை நீடித்து வருகிறது.
அப்படி ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப வேறு ஒரு நடிகரை தமிழ் சினிமாவே உருவாக்கி விடும். அப்படி சந்தானம், வடிவேலு இருவரினால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பியவர், யோகி பாபு என்றே சொல்லலாம். வடிவேலு, சந்தானம் எல்லாம் ஹீரோ ஆசையில் நகைச்சுவை வேடங்களில் நடிப்பதை குறைத்துக்கொள்ள அந்த வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்ட யோகி பாபு, இப்போது வரையிலும் நிற்காமல் ஓடி வருகிறார். யோகி படத்திற்குப் பிறகு நிறைய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். 'யாமிருக்க பயமேன்' படத்தில் தன்னுடைய முகத்தை கிண்டல் செய்து நடித்து தனது பலவீனத்தை பலமாக மாற்றினார்.
அதனைத்தொடர்ந்து 2015ஆம் ஆண்டு மணிகண்டன் இயக்கத்தில் வெளியான காக்கா முட்டை படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அந்தப் படத்தில் இவர் பேசிய ’எனக்கே விபூதி அடிக்க பாத்தல்ல’ என்ற வசனம் பல இளைஞர்களால் இன்று வரை அவர்களது நண்பர்களிடம் நகைச்சுவையாக பயன்படுத்தப்படும் வசனமாக உள்ளது. அதன் பிறகு அவரது வாழ்வில் ஏறுமுகம் தான். அதே மணிகண்டன் இயக்கிய 'ஆண்டவன் கட்டளை' படத்தில் விஜய் சேதுபதி நண்பனாக குணச்சித்திர வேடத்தில் கலக்கியிருந்தார்.
நகைச்சுவை மட்டுமின்றி, தன்னால் குணச்சித்திர வேடத்திலும் நடிக்க முடியும் என்பதை நிரூபித்தார். அதனைத்தொடர்ந்து ஆண்டுக்கு 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னேறினார். யோகி பாபு கால்ஷீட் கிடைக்காமல் காத்துக் கிடந்த முன்னணி நடிகர்கள் ஏராளம் என்ற நிலை ஆனது. ரஜினி, தொடங்கி தற்போது உள்ள நடிகர்கள் வரை, அத்தனை பேர் உடனும் இணைந்து நடித்துவிட்டார். வாராவாரம் வெள்ளிக்கிழமை வருகிறதோ இல்லையோ யோகி பாபுவின் படங்கள் வந்துவிடும்.
நெல்சன் இயக்கத்தில் நயன்தாராவுடன் நடித்த 'கோலமாவு கோகிலா' படத்தில் நயன்தாராவுடன் டூயட் பாடி அசத்தினார். நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த இவருக்கும் கதாநாயகன் ஆகும் ஆசை வந்தது. ஆனால், மற்ற நகைச்சுவை நடிகர்களைப் போல் அல்லாமல் நகைச்சுவை வேடங்களில் நடித்துக் கொண்டே தனக்கு ஹீரோவாக கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தார். இதில் இவரது புத்திசாலித்தனம் வெளிப்பட்டது. அப்படி இவர் நடித்த கூர்கா, தர்மபிரபு, பன்னிகுட்டி, பொம்மை நாயகி உள்ளிட்டப் படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினைப் பெற்றது.
அது மட்டுமின்றி மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடித்த மண்டேலா திரைப்படம் தேசிய விருது பெற்றது. இப்படத்தில் யோகி பாபுவின் நடிப்பு அனைவராலும் ரசிக்கப்பட்டது. அதே மடோன் அஸ்வின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மாவீரன் படத்திலும் யோகிபாபு காமெடிக்கு திரையரங்கமே குலுங்கியது. அது மட்டுமின்றி அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள 'ஜவான்' படத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்திலும் நடித்திருந்தார்.
இவர் நடிப்பு மட்டுமின்றி, விளையாட்டிலும் சிறந்து விளங்குபவர். கால்பந்து, கிரிக்கெட் நன்றாக விளையாடக்கூடியவர். படப்பிடிப்பு இடைவெளியில் இவர் கிரிக்கெட் விளையாடும் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வைரல் ஆகும். தனது பலவீனத்தை பலமாக மாற்றி தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் யோகி பாபு இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். யோகி பாபு மேலும் பல உயரங்களை அடைய வாழ்த்துவோம்.
இதையும் படிங்க: ‘டார்க் காமெடி என்ற பெயரில் நான் நடித்த படங்கள் ரசிகர்களை கவரவில்லை’ - நடிகர் சந்தானம்!