சென்னை: நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை சமந்தா நடித்துள்ள 'குஷி' திரைப்படம் செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் திரைப்படத்தின் புரோமோஷனை படக்குழுவினர் துவக்கி உள்ளனர். இத்திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டார்.
தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரி பேசியபோது, "தெலுங்கு படம் என்பதால் பாடல்கள் கமர்ஷியல் ஆக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இதில் பாடல்கள் எல்லாம் கிளாஸ் ஆக இருக்கிறது. நான் ஏற்கனவே விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ஒரு படம் பண்ணினேன் (துவாரகா), ஆனால் அது எனக்கு குஷி ஏற்படுத்தவில்லை. அதனால் அவர் மறுபடியும் என்னுடன் இணைந்து ஒரு படம் பண்ணி குஷி ஏற்படுத்த வேண்டும்" என்றார்.
நடிகர் விஜய் தேவரகொண்டா பேசியபோது, "செப்டம்பர் 1 ஆம் தேதி அன்று எங்கள் படம் 'குஷி' வெளியாகிறது. கண்டிப்பாக எல்லோரும் பாருங்கள், உங்களுக்கு குஷி ஏற்படுத்தும் என்று தமிழில் பேசினார். மேலும் இந்த படத்தில் நாயகன் கதாபாத்திரம் மணிரத்னம் ரசிகர், படத்தில் மட்டுமல்ல எங்கள் படத்தின் இயக்குனரும் பெரிய மணிரத்னம் ரசிகர் என்பதால் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்று நினைத்தோம்.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் என்னும் திருக்குறளை மேடையில் பேசினார் விஜய் தேவரகொண்டா. சமந்தாவிற்கு ஓய்வு தேவைப்படுகிறது. முதல்முறையாக அவர் ஓய்வு எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார். தற்போது அவர் அமெரிக்காவில் இருக்கிறார். நானும் அவர் இங்கு இல்லாததில் வருத்தமடைகிறேன். அவர் ஒவ்வொரு முறையும் சொல்வார் நான் பல்லாவரம் பெண் என்று.
தமிழில் எனக்கு நிறைய நடிகர்கள் இயக்குனர்கள் பிடிக்கும். ஆனால் தமிழ்நாட்டில் இருந்து ஒருவரை கடத்தி செல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக நான் இசையமைப்பாளர் அனிருத்தை கடத்தி சென்று விடுவேன். ஒவ்வொரு நடிகருக்கும் வெற்றி தோல்வி இருக்கும். ரஜினிகாந்திற்கு கூட வரிசையாக 6 படம் தோல்வி, அதன் பிறகு தான் ஜெயிலர் வெளியாகி 500 கோடி வசூல் செய்திருக்கிறது.
ஏன் கமல் கூட விக்ரம் மூலமாக கம் பேக் கொடுத்திருக்கிறார். சமந்தா நோய்வாய்படுவதற்கு முன்பு 60 சதவீத படமும், பின்பு 40 சதவீதம் எடுக்கப்பட்ட படம் தான் இந்த திரைப்படம்" எனத் தெரிவித்தார்.