சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகப் பணியாற்றி, தனது வாழ்க்கையைத் தொடங்கியவர். அவருடைய நகைச்சுவையான பேச்சின் மூலம் தமிழ் மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்தவர். அவர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான 'மெரினா' திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, நடிகர் தனுஷின் '3' படத்தில் நகைச்சுவை நடிகராகவும் நடித்தார்.
அதனைத்தொடர்ந்து, இயக்குநர் எழிலின் 'மனம் கொத்திப்பறவை' சிவகார்த்திகேயனுக்கு நல்ல வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றுத் தந்தது. அதையடுத்து, அவர் நடித்த 'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'எதிர் நீச்சல்', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' ஆகியவை சிவகார்த்திகேயனை தமிழ்த் திரையுலகில் தனி இடம் பிடிக்க வழி ஏற்படுத்திக்கொடுத்தன.
ரூ.15 கோடி சம்பளம்: அதன்பிறகு, அடுத்தடுத்த படங்களின் வெற்றியால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரானார். அப்போதுதான், 2018ஆம் ஆண்டு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பில் படம் நடிக்க ஒப்புக்கொண்டார். அதுவரையில் ஒரு படத்திற்கு பத்து கோடி ரூபாய் முதல் 12 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்றுக்கொண்டு இருந்த சிவகார்த்திகேயனுக்கு இப்படத்தில் 15 கோடி ரூபாய் சம்பளம் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இவரது நடிப்பில் வெளியான முந்தைய படங்களான, அதாவது 'ரஜினி முருகன்' படத்திற்கு அடுத்து வந்த 'ரெமோ', 'வேலைக்காரன்', 'சீமராஜா' ஆகிய படங்கள் வியாபாரரீதியில் தோல்விப்படமாக அமைந்தன. அதுவும் 'சீமராஜா' திரைப்படம் சிவகார்த்திகேயன் மார்க்கெட்டையே அசைத்துப்பார்த்தது. இதனையும் மீறி மிஸ்டர் லோக்கல் திரைப்படத்திற்கு 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. ஆனால், படம் தொடங்கும்போதே ஏராளமான பிரச்னைகளை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சந்தித்தார்.
ஃபார்மில் இல்லாத ராஜேஷ்: படத்தின் கதை சரியில்லை மற்றும் இயக்குநர் ராஜேஷ் வேண்டாம் எனத் தயாரிப்பாளர் கூறியும் பிடிவாதமாக இவர்தான் வேண்டும் என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். இதற்கு முன், ராஜேஷ் இயக்கிய மூன்று படங்களுமே பாக்ஸ் ஆஃபிஸில் அட்டர் பிளாப் ஆனது. அது தெரிந்துமே இவர்தான் வேண்டும் எனக் கூறியுள்ளார், எஸ்கே. இந்தக் கூட்டணி படம் குறித்து அறிவிப்பு வந்தவுடனே இந்தப் படம் தோல்வி அடையும் என சினிமா வட்டாரங்களில் பேச்சுகள் வந்தன.
ஏனென்றால், ராஜேஷ் அப்போது சுத்தமாக ஃபார்மில் இல்லை. 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்படத்தின்போது கொடுத்த சத்தியத்திற்காக ஞானவேல் ராஜாவுக்குப்படம் செய்தார், சிவகார்த்திகேயன். 2019ஆம் ஆண்டு வெளியான இப்படம் எதிர்பார்த்ததைப் போலவே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை. கிட்டத்தட்ட 35 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட படம் 25 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது. இதற்கு ராஜேஷின் மோசமான கதை மற்றும் திரைக்கதை தான் காரணம் என்றனர், விமர்சகர்கள்.
விக்ரம், சிம்பு படங்களுக்குப் பிரச்னை?: இந்த நிலையில், இத்தனை ஆண்டுகள் கழித்து தற்போது தனக்கு வரவேண்டிய பாக்கி சம்பளத்தை பெற்றுத்தரும்படி நீதிமன்றத்தை நாடியிருக்கிறார், சிவகார்த்திகேயன். அதில், 4 கோடி ரூபாய் சம்பள பாக்கியை கொடுக்கும் வரை, நடிகர்கள் விக்ரம் மற்றும் சிம்பு படங்களில் முதலீடு செய்வதற்கும், விநியோகிப்பதற்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு தடை விதிக்கக்கோரி நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
சிவகார்த்திகேயன் அளித்துள்ள மனுவில், "எனது நடிப்பில் மிஸ்டர் லோக்கல் படத்தை தயாரிப்பதற்காக, 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒப்பந்தம் போட்டு, 15 கோடி ரூபாய் சம்பளம் பேசி முடிவு செய்யப்பட்டது. 2019ஆம் ஆண்டு மே மாதமே படம் வெளியான நிலையில், இதுவரை 11 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டு, 4 கோடி ரூபாய் பாக்கி உள்ளது.
பாக்கியை கொடுக்கச் சொல்லுங்க: 11 கோடி ரூபாய்க்கான டிடிஎஸ் தொகையைப் பிடித்தம் செய்த ஞானவேல்ராஜா, அதை வருமான வரித்துறையில் செலுத்தாததால், 2019-20, 2020-21ஆம் ஆண்டுகளுக்கான டிடிஎஸ் தொகை 91 லட்ச ரூபாயை செலுத்த வேண்டும் என எனக்கு அனுப்பப்பட்ட சம்மனை எதிர்த்து முன்னரே வழக்குத் தொடரப்பட்டுள்ளது. எனவே, 4 கோடி ரூபாய் சம்பளப் பாக்கியை தனக்கு செலுத்துவதற்கும், பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வருமானவரித் துறையிடம் செலுத்துவதற்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
அவ்வாறு செலுத்தும் வரை ஞானவேல் ராஜா தயாரித்து வரும் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'ரிபெல்', விக்ரம் நடிக்கும் சீயான் 61, சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிக்கும் 'பத்து தல' ஆகிய படங்களில் மேற்கொண்டு முதலீடுகளை செய்வதற்கும், திரையரங்க வெளியீடு மற்றும் ஓடிடி வெளியீடு ஆகியவற்றின் விநியோக உரிமைகளை உறுதி செய்வதற்கும் தடை விதிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இதன் வழக்கு விசாரணை இம்மாதம் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. கோலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர் மீது முன்னணி நடிகர் சம்பள பிரச்னைக்காக நீதிமன்றத்தை நாடியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'பீஸ்ட்' மோடில் திரையரங்கை தெறிக்க விட்ட விஜய் ரசிகர்கள் - நெல்லையில் பரபரப்பு!