நடிகர் சிம்பு இன்று (பிப்.3) தனது 40 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சகலகலா வல்லவன் டி.ராஜேந்தரின் மகனான சிலம்பரசன் சிறுவயதிலேயே சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். டி.ராஜேந்தர் சிம்புவை ஆரம்பம் முதலே சினிமாவில் செதுக்கி வந்தார். தனது 'உறவைக் காத்த கிளி' படம் மூலம் 1984 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்.
ஆரம்ப காலம்: 'ஐ அம் லிட்டில் ஸ்டார்' பாடல் என ஒரு சிறிய பையனுக்கு எண்டரி பாடல் வைத்தது என்றால், அது சிம்புவிற்கு மட்டுமே. இன்று வரை அது போன்று யாருக்கும் வைத்ததே இல்லை எனலாம். அதன் பிறகு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாகக் கலக்கினார். அதன் பிறகு 'காதல் அழிவதில்லை' படத்தின் மூலம் நாயகனாக உயர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து வெளியான தம், அலை உள்ளிட்ட படங்களில் விரல்களை மடக்கி வித்தை காட்டினார். அக்காலகட்டத்தில் சிம்பு செய்யும் விரல் வித்தையை அன்றைய இளைஞர்கள் பின்பற்றினார்கள். சிம்புவின் உடை, கையில் கயிறு கட்டுவது காதில் கம்மல் மாட்டுவது என எல்லாமே ட்ரெண்ட் ஆனது.
சிலம்பரசன் என்ற இயற்பெயருடன் தமிழில் அறிமுகமான சிம்புவை, இப்போது எஸ்.டி.ஆர் என்ற புனைப் பெயரில் ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். அதோடு நடிப்பு என்ற வட்டத்திற்குள் மட்டுமே நின்றுவிடாமல் கதையாசிரியர், இசையமைப்பாளர், எழுத்தாளர், பாடகர், சிறப்பாக நடனமாடுபவர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக திறமையைக் கொண்டவராக திகழ்கிரார்.
ஹிட் படங்கள்: கடந்த 2004-ஆம் ஆண்டில் வெளியான 'மன்மதன்' மற்றும் சிம்பு இயக்கிய 'வல்லவன்' ஆகிய படங்கள் அதிரி புதிரி ஹிட்டடித்து. இதுவரை 30 படங்கள் நடித்திருக்கிறார். அதில் பெரிய அளவில் அவருக்கு வெற்றியைத் தந்த படங்கள் என்றால் மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா, தொட்டி ஜெயா, மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு என கூறலாம்.
நல்ல நடிகராக இருந்தாலும் இவருக்குத் திரும்பிய பக்கம் எல்லாம் பிரச்சினைகளும் சர்ச்சைகளும் தொடர்ந்தன. எந்த பக்கம் திரும்பினாலும் சர்ச்சை தான். அவர் பார்க்காத வெற்றியும் இல்லை அவர் பார்க்காத தோல்வியும் இல்லை. இப்படி ஏராளமான சர்ச்சைகளில் சிக்கியதால் ஒருகட்டத்தில் ரெட் கார்டு கொடுக்கும் நிலை ஏற்பட்டது.
தொடர் சர்ச்சை: சிம்பு என்றாலே சிக்கல் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. இவர் எழுதி பாடிய பீப் சாங் மாதர் சங்கத்தினரின் கண்டனத்திற்கு உள்ளாகியது. ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்தும் இவர் பேசினார். பின்னர் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் இடம் பெற்ற ரெட் கார்டு பாடல் மூலம் பதிலடி கொடுத்தார்.
பின் அதிலும், "பட்டதை பட்டுனு சொன்னா என்ன கெட்டவனு சொல்லுங்க ஓரமா போய் உக்காந்தா, என்ன உத்தமனு சொல்லறீங்க தப்புனு தெரிஞ்ச டப்புன்னு கொதிக்கும் பிரச்சனை எனக்கு பாயசம. என் பேச்சுல இல்ல பொய் வேஷம் என உரசி பாத நீ நாசம்" என்ற வரிகள் சிம்புவிற்காக எழுதப்பட்டது சர்ச்சையானது.
அரசியல் சம்பவம், மக்கள் போராட்டம், மெரினாவில் நடந்த போராட்டத்தில் அவர் பேசியது, காவிரி பிரச்சனைக்கு குரல் கொடுத்தது என அனைத்தும் விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டது. அத்துடன் இளைஞர்கள், மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அப்படி வந்தால் தான் பக்கபலமாக இருப்பேன் என உறுதியளித்தார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தன் குடும்பத்துடன் கலந்து கொண்டார்.
சிம்புவின் கம்பேக்: வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தின் போது உடல் எடை கூடி இருந்தார். இனி சிம்பு அவ்வளவு தான் என பலரும் பேசத் தொடங்கினர். ஆனால் சிம்பு உறுதியுடன் போராடி உடல் எடை குறைத்து மீண்டும் ’கோயில்’ பட காலத்து சிம்புவாக மீண்டு வந்தார். அதன் பிறகு அவர் நடித்த படம்தான் ’ஈஸ்வரன்’. படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் சிம்பு திரும்பி கிடைத்தது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்தது.
அடுத்தடுத்து இவர் நடித்த ஈஸ்வரன், மகா, மாநாடு உள்ளிட்ட படங்கள் ஹிட்டானது. சிம்பு நல்ல நடிகர் தான், ஆனால் படப்பிடிப்புக்குச் சரியாக வருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதை எல்லாம் திருத்தி தற்போது நல்ல மனிதராக உள்ளார் என்கின்றனர் அவருக்கு நெருங்கிய நண்பர்கள்.
சிம்பு காதல் விஷயத்தில் உண்மையிலுமே மன்மதன் தான். அப்போது இவருடன் சேர்ந்து நடித்த நடிகைகளுடன் காதல் வலையில் விழுந்தவர் பின்னர் அதில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் காதலே வேண்டாம் என்று ஒதுங்கி விட்டார். பின்னர் கோயில் கோயிலாகச் சுற்றினார். தற்போது ஆத்மன் என மாறியுள்ளார்.
தன் மீது எத்தனை குறைகள், சர்ச்சைகள் எழுப்பினாலும் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் ரசிகர்கள் வைத்த அன்பிற்காகத் தொடர்ந்து போராடி வரும், இப்படிப்பட்ட மனிதர் என்றுமே எங்களுக்கு சூப்பர் ஸ்டார் தான் என்று அவரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இவர் நடிப்பில் உருவாகி உள்ள பத்து தல படம் அடுத்த மாதம் ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஓய்ந்தது வாரிசு, துணிவு அலை… புதுப்பாய்ச்சலுக்கு தயாராகும் தமிழ் சினிமா?