ரிஷிகேஷ்: இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். இப்போது வரை அனைவருக்கும் பிடித்த நடிகராக இருப்பவர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் நடிகரான ரஜினிகாந்தின் படங்கள் தமிழ் சினிமாவின் வியாபாரத்தை வேறு தளத்திற்கு கொண்டு சென்றவை என்றால் அது மிகையாகாது.
இந்த நிலையில் கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் மூலம் வெற்றி இயக்குநராக அறியப்பட்ட நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இன்றும் அரங்கு நிறைந்த காட்சிகளாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.
இந்த ஆண்டு முதல் நாள் அதிக வசூல் செய்த படமாக ஜெயிலர் உள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் இது தான் முதல் நாள் வசூலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இது ரஜினிகாந்த் ஒன்று ஒற்றை மனிதனின் சாதனையாக பார்க்கப்படுகிறது. தர்பார், அண்ணாத்த படங்களின் தோல்வியால் துவண்டு இருந்த நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது ரசிகர்களுக்கு ஜெயிலர் மிகப் பெரிய விருந்தாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமின்றி ரஜினிகாந்த் ஆன்மீகத்திலும் மிகுந்த ஆர்வம் உடையவர். ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் இமயமலை செல்வது வழக்கம். ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக இவர் இமயமலை செல்லவில்லை. இவரது உடல்நிலை காரணமாக மருத்துவர்களின் ஆலோசனைப்படி இமயமலை செல்வதை தவிர்த்தார் .
மேலும் கரோனா காரணமாகவும் இமயமலை ரஜினிகாந்த் செல்லவில்லை என அவரே கூறினார். இந்த நிலையில் இம்முறை ஜெயிலர் ரிலீஸை ஒட்டி 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இமயமலை சென்றுள்ளார். அங்குள்ள தனது நண்பர்களுடன் தற்போது தங்கியுள்ளார். மேலும் அங்குள்ள கோயில்களில் சாமி தரிசனம் செய்து வருகிறார். அதே போல் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் நடிகர் ரஜினிகாந்த் உள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது ஆன்மீக நண்பர்களுடன் அமைதியாக அங்கு தனது ஓய்வை நேரத்தை செலவழித்து வருகிறார்.
இங்கு ஜெயிலர் படம் மிகப் பெரிய வெற்றி பெற்று இவ்வளவு கோடி வசூல் என்று பேசப்பட்டு வரும் நிலையில் ஜெயிலர் படத்திற்கு மக்களின் கருத்து எதுவுமே தெரியாமல் அமைதியாக இமயமலையில் பயணம் செய்து வருகிறார் ரஜினி. இது அவரது ரசிகர்களை பெருமையடைய வைத்துள்ளது என சமூக வலைத்தளங்களில் கருத்து பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: Jailer Box office: ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?