சென்னை: முத்தையா இயக்கத்தில் ஆர்யா, சித்தி இத்னானி நடிப்பில் உருவான 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' திரைப்படம் வரும் ஜூன் 2 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் இதன் இசை வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜி.வி.பிரகாஷ்குமாரின் ரசிகை மதுமிதா (கண் தெரியாதவர்), மேடையில் ஏறி வாத்தி படத்தில் இடம்பெற்ற 'வா வாத்தி' பாடலை பாடி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார். அதைத் தொடர்ந்து படக்குழுவினர் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கூறியது, “நீண்ட வருடத்திற்கு பிறகு ஆர்யாவுடன் இணைகிறேன். ‘ராஜா ராணி’ திரைப்படத்துக்குப் பிறகு இந்த படத்தில் தான் ஆர்யாவுடன் இணைகிறேன். மேலும் ‘வெயில்’ படத்திற்கு அடுத்து ‘ஓரம்போ’ படத்தில் ஆர்யாவிற்கு இசையமைத்தேன். ராஜா ராணி, மதராசப்பட்டினம் படங்களுக்கு இசையமைத்துள்ளேன். கிட்டத் தட்ட 8 வருடங்களுக்கு பிறகு அவருக்கு இசையமைத்துள்ளேன் என்றார். மேலும் இந்த படத்திற்கு என்ன தேவையோ அதை கொடுத்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.
நடிகர் ஆர்யா பேசுகையில், “இன்றைய நாயகன் ஜி.வி தான். எப்பொழுது தூங்குகிறார், எப்போது படப்பிடிப்பில் இருக்கிறார் எனத் தெரியாது. அந்த அளவிற்கு கடின உழைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் என்று புகழ்ந்தார். மேலும் பாடல்களை கேட்டு உடனே ஜி.வி-க்கு போன் செய்து, இந்த படத்தில் நான்தான் நடிக்கிறேன். எனக்காகவா இப்படி பண்ணிருங்க என கேட்டேன். அதற்கு அவர் என்னால் என்ன செய்ய முடியுமோ அதை அனைத்தும் இந்த படத்தில் செய்துள்ளேன் என்றார்.
மேலும், முத்தையாவிற்கு இந்த இடத்தில் நன்றி சொல்ல வேண்டும். எனக்காக கிராமத்து கதையை தயார் செய்தார். என்னை விட என்னை ரசித்து, ரசித்து படமாக்கினார். அவருக்குளும் ஒரு நடிகர் இருக்கிறார். எதிர்காலத்தில் அவரும் நடிக்கலாம். ஏனென்றால் என்னை இப்படி எந்த படத்திலும் காட்டியது கிடையாது. அப்படி என்னை இந்த படத்தில் காட்டியுள்ளார் முத்தையா” என்று பேசினார்.
இயக்குநர் முத்தையா பேசும்போது, “நன்றியின் வெளிப்பாடாக தான் இந்த படம் இருக்கும். நன்றியைப் பற்றி இந்த படம் பேசும் என்றார். ஒவ்வொரு படத்திற்கும் படக்குழுவை சேர்ப்பது மிகவும் முக்கியம். அதன் பிறகு இசை. இசைதான் ஒரு படத்திற்கு ரசிகர்களை படம் பார்க்க அழைத்து வரும். அந்த வகையில் ‘கொம்பன்’ படத்துக்கு பிறகு ஜி.வி பிரகாஷ் உடன் இணைகிறேன். சுமார் 6 பாடல் கொடுத்துள்ளார். அனைத்தும் பிரமாதமாக வந்துள்ளது.
ஒரு சிட்டி படம் பண்ணுவதற்காக தான் ஆர்யாவை சந்தித்தேன். ஆனால் அவர் கிராமத்து கதை வேண்டும் என்றார். அதன் அடிப்படையில் தான் இந்த படத்தில் இணைந்தோம். இந்த படத்தில் கிட்டத்தட்ட 9 சண்டைக் காட்சிகள் உள்ளது. வழக்கம் போல மண் மணம் மாறாமல், மரபு மாறாமல் இந்த படம் இருக்கும். அனைவரும் படம் பார்த்து ஆதரிக்க வேண்டும்” என்றார்.
கே.பாக்யராஜ் பேசுகையில், “இந்த விழா மேடையில் கிராமிய பறை இசை அருமையாக இருந்தது. எனக்கு எது சம்பந்தம் இல்லையோ அதை எல்லாம் ரசித்து பார்த்து கொண்டிருந்தேன். குடும்பத்தில் எத்தனை உறவுகள் உள்ளது என்பதை முத்தையா காட்டி வருகிறார். சிறு வயதாக இருந்தபோது என்னுடைய படத்திற்கு பாட வந்தவர் ஜி.வி பிரகாஷ். ஆனால் பாட மாட்டேன் என அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தார்.
அதன் பிறகு அவரது அம்மா அவருக்கு கற்றுக்கொடுத்து பாடினார். அப்படி பார்த்தேன் அவரை. அதன் பிறகு இசையில் பிரமாதமாக கலக்கி வருகிறார். அதோடு நடிப்பிலும் கலக்கி வருகிறார். இந்த படத்தின் பாடலுக்கே இந்த படம் வெற்றி பெறும். இத்தனை பாடலாசிரியர்களுக்கு வாய்ப்பு கொடுத்ததற்கே அவரை தனியாக பாராட்ட வேண்டும்” என்றார்.
நடிகர் சிங்கம் புலி பேசும்போது, “ஆர்யாவுடன் அதிக நாட்கள் பணியாற்றியதும் நான்தான், நீண்ட ஆண்டுகள் கழித்து அவரை பார்த்த நடிகரும் நான்தான். கிட்டதட்ட 13 ஆண்டுகள் கழித்து தான் அவரை ‘நான் கடவுள்’ படத்தில் சந்தித்தேன். அதில் கிட்டத்தட்ட அவருடைய 2 பிறந்தநாள் வரை ஒன்றாக பணியாற்றினோம். இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுத்தால் நன்றாக இருக்கும் என்றார்.
மேலும் சமீபத்தில் ரபேல் கடிகாரம் பிரச்னை வந்தது. அதேபோல எனக்கு ஒரு வாட்ச் வாங்கி தாங்க என கேட்டோம். அவரும் எங்களை அழைத்து சென்று திருவிழாவில் விற்பனையாகும் 25 காசு மதிப்புள்ள ஜவ்வு மிட்டாய் கடிகாரத்தை வாங்கிக் கொடுத்து ஓடிவிட்டார் என நகைச்சுவையாக பேசினார்.
நடிகை சித்தி இத்னானி பேசுகையில், “நீங்கள் இங்கு வந்ததற்கு ரொம்ப சந்தோசம். இந்த படம் எனக்கு கொடுத்ததற்கு ரொம்ப நன்றி முத்தையா. இந்த படத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டிருக்கோம். வரும் ஜூன் 2 ஆம் தேதி தியேட்டரில் படம் பாருங்க” என்று கூறினார்.
இதையும் படிங்க: காதல் படங்களில் அதிகம் நடித்ததில்லை: ஐஸ்வர்யா ராஜேஷ் ஓப்பன் டாக்!