'அஜித்' என்று சொன்னாலே அவரது தன்னம்பிக்கை ஒன்றே நமக்குப் பாடமாக நம் கண்முன் வந்து நிற்கும். பள்ளிப்படிப்பை தாண்டாத அஜித், தமிழ் திரையுலகையே ஆட்டிவைக்கிறார் என்றால், அதற்கு பின் இருக்கும் கடின உழைப்பும் காயங்களும் எண்ணிலடங்காதவை.
காதல் கோட்டை, காதல் மன்னன் என சாக்லேட் பாயாக வலம் வந்த நடிகர் அஜித்தின் வேறொரு பரிமாணமாக வில்லனாக ரசிகர்களுக்கு அறிமுகம் செய்தது எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான ’வாலி’ திரைப்படம். அதன் பின்னர் வெவ்வேறு கதைக்களங்களில், அஜித் நடிக்கத் தொடங்கினார்.
அவரது 25ஆவது படமாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘தீனா’ படம் ரசிகர்கள் மத்தியிலும், வர்த்தக ரீதியாகவும் பெரும் வெற்றி அடைந்தது. இந்தப்படத்திற்கு பின் நடிகர் அஜித் ‘தல’ என்று ரசிகர்களாலும் திரைத்துறையினராலும் அழைக்கப்பட்டார். அதன் பின்னர் வெளியான ஒரு சில படங்கள் எதிர்பார்க்கப்பட்ட அளவில் ஓடவில்லை.
அதன் பின், பலஆண்டுகளுக்குப்பின் நெகடிவ் வேடத்தில் அஜித் நடித்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான ’பில்லா’ திரைப்படம், அஜித்திற்கு பெரிய கம்பேக்காக அமைந்தது. ஆனால், ’பில்லா’விற்குப்பின் வெளியான படங்கள் அவருக்கு கைகொடுக்காமல் போனது.
அதற்கு சற்றும் தளராத அஜித், முதல்முறையாக வெங்கட் பிரபுவுடன் கைகோர்த்தார். அதன் விளைவாக அஜித்தின் 50ஆவது படமாக வெளியான ’மங்காத்தா’ திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்தப்படம் மூலம் சினிமாவில் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்த பல வழக்கமான பாணியை உடைத்து, படத்தில் முக்கிய கதாப்பாத்திரமான அஜித் கொடூரமான வில்லனாக நடித்திருந்தார்.
இதுமட்டும் இல்லாமல் பெரும்பாலான ஹீரோக்கள் வயது முதிர்ந்த கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்கவே தயங்கிய காலகட்டத்தில், தலைக்கு கறுப்பு சாயம் பூசாமல் 'சால்ட் அண்ட் பெப்பர்' லுக்கில் நடித்து புது ட்ரெண்டையே உருவாக்கினார் நடிகர் அஜித். அதன் பின்னர் தொடர்ந்து இதே கெட்டப்பிலேயே நடிக்கவும் செய்தார், அஜித்.
இப்படி, திரைத்துறையில் தோல்விகளைக்கண்டாலும் தொடர்ந்து மீண்டு வந்து பலருக்கும் தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறார், அஜித். நடிப்பது மட்டுமின்றி தனது உள்ளுணர்வைவிடாமல் பின்தொடர்ந்து வருபவர் நடிகர் அஜித். இப்படி தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் விடாமுயற்சிக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறார்.
நாயகனாக திரைத்துறையில் வலம் வரும் போதிலும், தனக்கு பிடித்த பைக் ரேஸிங், கார் ரேஸிங், ஹெலிகாப்டர் சோதனை பைலட், மற்றும் துப்பாக்கிச்சுடுதல் என பல்வேறு துறைகளிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கிச்சுடுதல் போட்டியிலும் கலந்துகொண்டு பதக்கங்களை அள்ளினார்.
கார் ரேஸிங் மற்றும் பைக் ரேஸிங்கின்போது பலமுறை விபத்தில் சிக்கி, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தாலும், சற்றும் மனம் தளராமல் அதிலிருந்து மீண்டு வந்து மீண்டும் தனது உள்ளக்கிடக்கையை நோக்கி பயணிக்கத்தொடங்கி, பலருக்கும் தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் வாழ்கிறார், அஜித்.
தான் புகழின் உச்சியில் இருக்கும்போதே தனது ரசிகர் மன்றங்களைக் கலைத்த அஜித், தனது ரசிகர்களிடமும் அவரவர் தம் குடும்பங்களை முதலில் கவனித்துக்கொள்ளுங்கள் என தொடர்ந்து கூறி வருகிறார். அதுமட்டுமின்றி தனது படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, சினிமா சார்ந்த விழாக்கள், என எதிலும் கலந்துகொள்ளாமல் ஒரு நட்சத்திர வாழ்க்கையை விட்டு விலகியே இருந்து வருகிறார்.
இப்படி இருக்கையில் சமீபத்தில் அவருக்கென இருந்த ‘தல’ என்ற அவரின் பட்டத்தையும் வேண்டாம் எனக்கூறி, தன்னை 'AK' என்றே அழைக்குமாறு ரசிகர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். நடிகர் அஜித் இப்படி என்ன செய்தாலும், வெற்றி, தோல்விகளைக் கடந்த ஒரு ரசிகர் பட்டாளத்தையே தன் வசம் வைத்திருக்கிறார்.
திரைத்துறையிலும் சரி, வாழ்க்கையிலும் சரி பல அடிகள் பட்டாலும், பலதரப்பட்ட மக்களுக்கும் தன்னம்பிக்கை நாயகனாக வலம் வரும் அஜித், 1993இல் நடித்து வெளியான ‘அமராவதி’ படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகம் தந்து இன்றுடன் 30 ஆண்டுகள் ஆகின்றன. இதனை சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'பொன்னி நதி' பாடலை இத்தனை காலமும் நெஞ்சில் சுமந்துகொண்டிருந்தோம் - கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் நெகிழ்ச்சி!