தமிழ் திரைப்படங்களில் ஹீரோ - ஹீரோயின் ஒருவரை ஒருவர் கண்டதும் காதல் எனும் விதமே பல ஆண்டுகளாக கையாளப்பட்டு வந்தது. ஆனால் அவைகளை உடைத்து ஹீரோ ஹீரோயின் ஒருவரை ஒருவர் பார்க்காமலே காதல் எனும் புதிய முறையை தமிழ் சினிமாவுக்கு கொண்டுவந்த திரைப்படம் ”காதல் கோட்டை” .
அகத்தியன் இயக்கத்தில் அஜித், தேவயானி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான படம் ‘காதல் கோட்டை’. ஹீரா, மணிவண்ணன், தலைவாசல் விஜய் என பலர் நடிப்பில் 1996ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
சூர்யா எனும் கதாபாத்திரத்தில் அஜித்தும், கமலி எனும் கதாபாத்திரத்தில் தேவயானியும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமலேயே கடிதம் மற்றும் டெலிபோன் மூலமாகவே காதலித்து வருவர். இறுதியாக அவர்கள் இருவரும் சந்தித்துக்கொள்வதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.
படத்தை பார்க்கும் அனைவரையும் சூர்யா எப்படியாவது கமலியை சந்தித்துவிட வேண்டும், அவர்களின் காதல் கைகூட வேண்டும் என ஏங்க வைத்துவிடுவார் இயக்குநர் அகத்தியன். மேலும் சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்கம் என மூன்று தேசிய விருதுகளை வாங்கிக் குவித்த ’காதல் கோட்டை’ வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள் ஆகிறது. இதனை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ’எப்படி நடந்து என்றே தெரியவில்லை’ ; தி க்ரே மேன் படம் குறித்து தனுஷ் பேச்சு