மனோரம்மா நடிக்க வேண்டும் என்றாலே உடன் நடிப்பவர்களுக்கு கொஞ்சம் நடுக்கம் எடுக்கத் தான் செய்யும். மூன்று பக்க வசனம் என்றாலும், ஒரே டேக்கில் அவர் ஓ.கே., செய்து விடுவார். உடன் இருப்பவர்கள் கொஞ்சம் திணறித் தான் போவார்கள்.
திரையில் தோன்றினாலே ரசிகர்கள் விசிலடித்துக் கொண்டாடும் நடிகர்கள் சினிமாவில் உண்டு. நடிகைகளில் அப்படியான ஒருவர் மனோரமா. பிற்காலத்தில் ஆண் துணை இல்லாமல் பிள்ளையை வளர்த்து ஆளாக்கும் தாயாகவே நிறைய படங்களில் நடித்திருந்தாலும், அவைகளிலும் வித்தியாசம் காட்டி ரசிகர்களை கட்டிப்போட்டு காட்சியோடு ஒன்றிப்போக செய்வதில் அவருக்கு நிகர் அவரே.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், 1937ஆண்டு மே 26ஆம் தேதி மனோரமா பிறந்தார். இவரது இயற்பெயர் கோபி சாந்தா. மன்னார்குடியில் இருந்து இவரது குடும்பம், காரைக்குடியை அடுத்த பள்ளத்துருக்கு குடி பெயர்ந்தது. 6ஆம் வகுப்பிற்கு மேல் படிப்பைத் தொடர முடியாத மனோரமா, இளம் வயதில் வறுமையின் காரணமாக நகரத்தார் வீடுகளில் வேலை பார்க்கத் தொடங்கினார். அங்கு இவரின் குரல் வளம் அனைவரையும் கவர, 'பள்ளத்தூர் பாப்பா' என அறியப்பட்டவர், உள்ளூர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். அந்த நாடக உலகம் தான், இன்று எல்லோராலும் அறியப்படும் மனோரமா என்ற பெயரைத் தந்தது. திரைத்துறை அவருக்கு ஆசையாய் தந்த பெயர் 'ஆச்சி'
மனோரமா நடித்த முதல் இரண்டு படங்கள் பாதியில் நிறுத்தப்பட்டு திரைக்கு வராமலே போயின. முதல் சறுக்கல் முற்றிலும் சறுக்கல் என்ற விதியை ஆச்சி விசயத்தில் மாற்றியவர் கவிஞர் கண்ணதாசன். கடந்த,1958ஆம் ஆண்டு அவர் இயக்கித் தயாரித்த, மாலையிட்ட மங்கை படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். நகைச்சுவை கலந்த இந்த கதாநாயகி வேடத்தில் முதலில் ஆச்சி நடிக்க தயங்கினாலும், கண்ணதாசன் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையால் நடித்தார். அது குறித்து நினைவுகூர்ந்த ஆச்சி, கதாநாயகியாக மட்டும் நடித்தால் இரண்டு மூன்று வருடங்களில் காணாமல் போய்விடுவீர்கள், நகைச்சுவை பாத்திரத்தில் நடித்தால் நீண்ட காலம் நீடிக்கலாம் என்றார். அங்கிருந்து கிடைத்த நம்பிக்கை தான் இந்த வாழ்க்கை என்றார்.
ஆச்சியின் அந்த நம்பிக்கையும் போராட்டமும் தான், 5 முதலமைச்சர்களுடன் நடித்தது, 5 தலைமுறை நடிகர்களுடன் நடித்தது, 1000 படங்களைக் கடந்து, நடிப்புக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது என அடுக்கடுக்கான சாதனைகளை அவர் வசமாக்கியது.
தான் ஏற்று நடித்த பாத்திங்களுக்கு மட்டும் ஆச்சி பெருமை சேர்க்கவில்லை. தான் நடித்த வகைமாதிரிக்கும் (ஜானர்) பெருமை சேர்த்தார். இவரது வெற்றிக்கு பின்னரே நகைச்சுவை நடிகர் என்ற சொல்பதம் சினிமாவில் அதிக பயன்பாட்டுக்கு வந்தது.
ஆச்சியின் நடிப்பில் கிளாசிக் விரிசைகளுக்கு பஞ்சமே இல்லை.. இருந்தாலும் மனோரமா என்றது மனதில் வந்து நிற்பதில் முந்திக் கொள்வதில், ‘தில்லானா மோகனாம்பாள்’ ஜில்ஜில் ரமாமணிக்கு முதலிடம் உண்டு. இது 70ஸ் கிட்களின் ரசனை என்றால்,90ஸ் கிட்சுகள் ’ சம்ராசம் அது மின்சாரம்' கண்ணமாவைக் கொண்டாடினர். "கண்ணமா.... கம்முனு கிட’ என்ற வசனம் வலைதளங்கள் இல்லாத காலத்திலேயே வைரல் ஹிட்.
நடிகன் திரைப்பட பேபி அம்மா, சிங்காரவேலன் தாயம்மா, நாட்டாமை தாய் கிழவி என தலைமுறைகளுக்கேற்ப இந்த பட்டியல் நீளும்.
இளமை முதல் வாழ்க்கையில் போராடியே வெற்றி பெற்றவர் மனோரமா. அதனால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நெருக்கமான தோழியாக இருந்தார். தன் வலிகள் எதையும் எப்போது திரையில் காட்டியதில்லை மனோரமா. 50 வருடங்களுக்கு மேலாக நம்மைச் சிரிக்க வைத்துக்கொண்டே இருந்தார். அது தான் ஆச்சி மனோரமா. இவர் கடந்த 2015 ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி தனது 78ஆவது வயதில் நம்மை விட்டு பிரிந்து விண்ணுலகம் சென்றார்.
தனது நேர்காணல் ஒன்றில் ஆச்சியே சொன்னது போல, அவர் மீண்டும் மனோரமாவாக பிறக்க வேண்டும். நம்மையும் நம் தலைமுறைகளையும் சிரிக்க வைக்க வேண்டும்..
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆச்சி...
இதையும் படிங்க: Thalapathy 68: 'மீண்டும் ராயப்பன்..!': தளபதி 68 கதை இதுவா..?