கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனை ஆதரித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜாகிருஷ்ணன் ஆகியோர் இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டனர்.
அப்போது அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது, “ஆன்மீக உணர்வு உடையவர்கள் அதிமுகவில் இருக்கின்றனர். அவர்களை திமுக காயப்படுத்துகிறது. சிறுபான்மை மக்களை பாதுகாப்பது அதிமுக அரசு தான். கச்சத்தீவை தாரை வார்த்தது திமுக தான். ஆனால், காவிரி பிரச்னை வந்தபோது 21 நாட்கள் நாடாளுமன்றத்தையே முடக்கியவர்கள் அதிமுக எம்.பி.க்கள் என்பதை மக்கள் மறந்துவிடக்கூடாது.
இந்த ஆட்சி தேர்தலுக்கு பிறகு கலைந்துவிடும் என ஸ்டாலின் ஆட்டம் போட்டு வருகிறார். ஆட்டம் போட்டால் என்ன ஆகும் என்பதை ஸ்டாலின் உணர வேண்டும். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எதிர்க்கட்சிகளை மதிக்கும் கட்சியாக அதிமுக இருக்கிறது” என்றார்.