தமிழ்நாடு முழுவதும் 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலும், 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலும் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. வாக்களர்களும் தங்களது வாக்கினை ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வாக்கினைப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக வருகை தந்த நடிகர் உதயநிதி ஸ்டாலின், மக்களோடு மக்களாக நீண்ட வரிசையில் காத்திருந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.