திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முக்கியக் கட்சிகளான அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர், மநீம போன்ற கட்சிகள் இங்கே களமிறங்கியுள்ளன. திருப்பரங்குன்றம் தொகுதியின் வாக்காளர்களில் ஆண்கள் 1,49,421 பேர், பெண்கள் 1,52,111 பேர், மூன்றாம் பாலினத்தவர் 25 பேர் என மொத்தம் 3,01,557 பேர் உள்ளனர்.தமிழகத்திலேயே 18-லிருந்து 19 வயதுக்குள் உள்ள அதிக இள வயது வாக்காளர்களைக் (7,696 பேர்) கொண்ட தொகுதியாகும். இது மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 2.6 சதவிகிதம். அதே வயதுடைய தமிழகத்தின் மொத்த வாக்காளர்களில் (8,98,979 பேர்) இது 0.9 சதவிகிதமாகும்.
இந்தத் தொகுதி வாக்காளர்களின் எதிர்பார்ப்பும், கோரிக்கையும் என்னவாக உள்ளது என்பது குறித்து ஈடிவி பாரத் ஊடகம் களத்திலிறங்கி ஆய்வு மேற்கொண்டது. அதன் விளைவாக பொதுமக்கள் பலர் தங்களது கருத்துக்களை முன் வைத்தனர். மட்டுமன்றி, இந்தத் தொகுதியில் வெற்றி பெற வாய்ப்புள்ள வேட்பாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தங்களின் ஆலோசனையாகவும் தெரிவித்தனர்.
வடிவேல்கரையைச் சேர்ந்த பால்காரர் பாலு கூறுகையில், எங்கள் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் விளையாடுவதற்கு ஏற்றவாறு நல்ல மைதானம் கிடையாது. நிறைய புறம்போக்கு நிலங்கள் இருந்தும் அவர்களுக்குத் தேவையானதை ஆட்சியாளர்கள் செய்ய மறுக்கிறார்கள். மேலும் குடிநீருக்காக அமைக்கப்பட்ட பைப்புகள் அனைத்தும் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன' என்று ஆதங்கப்படுகிறார்.
அதே கிராமத்தைச் சேர்ந்த ரத்தினகிரி என்ற ஓய்வு பெற்ற நீதிமன்ற பணியாளர் கூறுகையில், நிலையூர் கால்வாயிலிருந்து வடிவேல் கரை கண்மாய்க்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு வடிகாலாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது. வடிவேல்கரை கால்வாயை பிரதானக் கால்வாயாக மாற்றி முப்போகம் இந்த மண்ணில் விளைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் ஒருபோதும் நடவடிக்கையில்லை. வடிவேல்கரை கால்வாய்க்குப் பிறகு உருவாக்கப்பட்ட செல்லம்பட்டி கால்வாய், திருமங்கலம் கால்வாய் ஆகியவற்றை பிரதான கால்வாயாக மாற்றியுள்ளனர்' என்றார்.
விளாச்சேரி கொட்டாரம் மந்தை பகுதியைச் சேர்ந்த தவமணி என்பவர் கூறுகையில், 'ஏறக்குறைய 150 குடும்பங்கள் உள்ள இடத்திற்குப் பட்டா கேட்டு பலமுறை போராட்டம் நடத்தியுள்ளோம். தற்போது பட்டாவுக்கு அரசாங்கம் ஒப்புதலளித்தும் இன்னமும் எங்கள் கைக்கு கிடைக்கவில்லை. முறையாக வரி கட்டிவருகிறோம். எங்களது வீடுகளுக்கு கதவு எண் கொடுக்கப்பட்டும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த முறை எங்களது கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால் வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்படைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை' என்றார்.
திருநகரிலுள்ள சுந்தர் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் செயலாளர் நாகராஜன் பேசுகையில், 'நீராதாரங்களை மேம்படுத்தி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதோடு, சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க வேண்டும். சேமட்டான் கண்மாயில் கடந்த 12 ஆண்டுகளாக சுத்தமாய் தண்ணீர் வரத்தே இல்லாமல் இருந்தது. திருநகர்ப் பக்கம் இளைஞர்கள் மூலமாக தூர்வாரியதால் தற்போது மறுகால் பாயும் அளவிற்கு சீரமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் ஏறக்குறைய ரூ.3 லட்சம் வரை வசூல் செய்து இந்தப் பணியை செய்தோம். தற்போது கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்தி, முழுவதுமாய் வேலி அமைத்து நன்கு சீரமைக்க வேண்டும்' என்றார்.
திருநகர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திகா தேவி பேசுகையில், 'மாணவர்கள் போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். இதனால் திருட்டு உள்ளிட்ட சட்டத்திற்கு புறம்பான சம்பவங்களும், பெண் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறலும் நடைபெறுகிறது. இதனை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்' என்றார்.
திருநகரைச் சேர்ந்த பூ வியாபாரி ராமராஜ் பேசுகையில், 'திருப்பரங்குன்றத்தைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் மல்லிகை விவசாயம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். நல்ல விளைச்சல் நேரத்தில் விலை கிடைக்காததும், விளைச்சல் குறைந்த காலத்தில் விலை அதிகரிப்பதும் சூதாட்டத்தைப் போன்று நிகழ்கிறது. இதனை நிரந்தரமாகத் தவிர்ப்பதற்கு, குளிர்பதனக் கிட்டங்கிகள், மதிப்புக்கூட்டுதலுக்கான தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும்' என்றார்.
நிலையூர் கிராமத்தைச் சேர்ந்த பிஸியோதெரஃபிஸ்ட் ஹரி மணிகண்டன் பேசுகையில், 'பல்வேறு தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக ஒருகாலத்தில் மதுரை இருந்தது. தற்போது அந்த நிலை மாறிவிட்டது. படித்த இளைஞர்கள் கோவை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் என்று வெளியிடங்களுக்கு வேலை தேடிச் செல்லும் நிலையுள்ளது. இந்த நிலை மாற வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்' என்றார்.