நாகை மாவட்டம், மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, வருகின்ற 18ஆம் தேதி நடைபெறும் தேர்தல் பிரதமரை மட்டும் மாற்றுகின்ற தேர்தல் அல்ல, தமிழகத்தில் முதலமைச்சரையும் மாற்ற இருக்கின்ற தேர்தல் ஆகும். முதலமைச்சர் பழனிசாமி தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுத்து கொள்ளையடிப்பதற்க்காகவே ஆட்சி நடத்துகிறார். திமுக தலைவர் கருணாநிதி இல்லாமல் நாம் சந்திக்கின்ற முதல் தேர்தல் என்பதால் உடன்பிறப்புகள் அனைவரும் எங்களுக்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் என்று முதலில் நான் அறிவித்ததும் கேலி கிண்டல் செய்தார்கள். அதன் பின்பு இந்தியாவே அதனை வழிமொழியத் தொடங்கியது. எனக்கு எதிர் வேட்பாளர் யாரும் கிடையாது என்று பேசிக்கொண்டிருந்த மோடி ராகுல் பிரதமர் என்று அறிவித்ததை எதிர்பார்க்கவில்லை. ஆனால், திமுகவை கொச்சைப்படுத்த வேண்டும் என்பதற்காகதான் சோதனை, ரெய்டுகள் நடத்துகிறார்கள். தவறு இருந்தால் நாங்கள் தண்டனையை ஏற்றுக் கொள்கிறோம்.
புகார் வந்ததால்தான் சோதனை செய்கிறோம் என்கிறார்கள். நான் புகார் தருகிறேன் மோடி வீட்டிலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், மற்றும் அமைச்சர்கள் வீடுகளில் பணமிருக்கிறது சோதனை நடத்த வருமானவரித்துறை தயாரா இருக்கிறதா? இவ்வாறு அவர் பேசினார்.