தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் கதிர்காமு மீது ஏப்ரல் 8ஆம் தேதி அதே தொகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் தேனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கதிர்காமு மீது கொலை மிரட்டல், கற்பழிப்பு உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது மீண்டும் ஒரு பிரளயம் எழுந்துள்ளது. அதாவது கதிர்காமு மீது அளிக்கப்பட்டுள்ள புகாரில், அமமுக கொள்கை பரப்பு செயலாளரும், தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான தங்கதமிழ்செல்வனும் பாதிக்கப்பட்ட பெண் மீது ஆசைப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. கதிர்காமு மீது அளிக்கப்பட்ட புகாரின் முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.
அதில் பாதிக்கப்பட்ட பெண் கடந்த 2015ஆம் ஆண்டு தனது தந்தையின் சிகிச்சைக்காக தேனி அல்லிநகரத்தில் இருக்கும் கதிர்காமுவின் மருத்துவமனையில் இருந்ததாகவும் அப்போது கதிர்காமு தனக்கு மயக்க ஊசி செலுத்தி உடலுறவு கொண்டதாகவும், அதை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் சம்பந்தபட்ட புகைப்படம், வீடியோவை தரும்படி கேட்டதற்கு தேனியில் உள்ள எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு வந்தால் தருவதாகவும் கதிர்காமு கூறியதாகவும், ஆனால் அங்கு சென்றால் தங்கதமிழ்செல்வன் தன் விருப்பத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளுமாறு மிரட்டியுள்ளதாகவும் புகாரில் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
எனவே தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கதிர்காமுவால் அச்சுறுத்தல் உள்ளதாகவும், மேலும் தன்னை கற்பழித்து அதனை புகைப்படம் வீடியோக்களாக எடுத்து வைத்துக்கொண்டு சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி வரும் கதிர்காமு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.
அமமுகவை சேர்ந்த கதிர்காமு மீது வெளியாகியுள்ள பாலியல் புகாரில் தங்கதமிழ்செல்வன் பெயரும் இணைந்துள்ளது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.