மக்களவைத் தேர்தல் முன்னிட்டு வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது. கோவா மாநில சிரோதா சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் மஹாதேவ் நாயக் (Mahadev Naik) என்ற வேட்பாளருக்கு வித்தியாசமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அம்மாநிலத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அதற்கு மூன்று நாட்கள் முன்னதாக (ஏப்ரல் 20) அவர் தனது மகனின் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளார். ஆனால், தேர்தலையொட்டி திருமண நிகழ்ச்சியும் அரசியலாக்கப்பட வாய்ப்புள்ளதாக கருதிய தேர்தல் ஆணையம் அவரது மகனின் திருமண தேதியை மாற்றும்படி கோரியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவா தேர்தல் அதிகாரி அஜீத் ராய், "இதுபோன்ற திருமண நிகழ்ச்சிகள் தேர்தலுக்காக பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளது. அதனால் திருமண தேதியை மாற்றும்படி மஹாதேவ் நாயக்கிடம் அறிவுறுத்தியுள்ளோம். இல்லையென்றால் எளிய முறையில் திருமணம் நடத்தும்படி கூறியுள்ளோம். இந்த நிகழ்ச்சியில் விதிகள் ஏதும் மீறப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இந்த சம்பவம் குறித்து பேசிய மாஹாதேவ் நாயக், "திருமண தேதியெல்லாம் மாற்றமுடியாது. அதற்கு பதிலாக முகூர்த்த நேரத்தை காலையிலிருந்து மாலைக்கு மாற்றியுள்ளோம். இதன்மூலம் திருமணத்திற்கு வருபவர்களுக்கு சாப்பாடு பரிமாறப்படுவது தவிர்க்கப்படும். நான் வெற்றியடைவேன் என எதிர்க்கட்சியினர் இதுபோன்று செய்கிறார்கள். தேர்தல் அதிகாரிகள் அவர்கள் கடமையை செய்யட்டும்" என்று கூறினார்.
இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. ஒரு தனிநபரின் திருமண விழா எப்படி தேர்தலை பாதிக்கும் என கேள்வி எழுப்பியுள்ள அக்கட்சி, இந்த விவகாரத்தில் தேர்தல் அதிகாரிகள் தங்கள் வரம்பை மீறிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளது.