மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் டேவிட் அண்ணாதுரைக்கு ஆதரவாக தினகரன் வாக்கு சேகரித்தார். மதுரை புதூர் பேருந்து நிலையத்தில் பரப்புரை மேற்கொண்ட போது அவர் பேசுகையில், “மத்தியில் ஆளுகின்ற பாஜக அரசு ஜிஎஸ்டி வரியை கொண்டுவந்து நடுத்தர மற்றும் சிறு தொழில்கள் அனைத்தையும் முடக்கியது.
தனது தந்தையார் கருணாநிதி மறைவுக்குப் பிறகு ஸ்டாலின் சந்தித்த முதல் தேர்தல் ஆர்கேநகர் தேர்தல். இதில் திமுக தனது டெபாசிட் இழந்தது. அது போன்ற ஒரு சூழல் திருவாரூரிலும் ஏற்படும் என்பதற்காகவே அவர்கள் நீதிமன்றத்தை நாடி அங்கு இடைத்தேர்தல் நடத்த விடாமல் செய்தார்கள். தற்போது நடைபெற உள்ள தேர்தலிலும் மிகக் கடுமையான தோல்வியை திமுக கூட்டணி சந்திக்கும்.
மேலும், முல்லை பெரியாறு அணை தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக இருப்பதாகவும், ஆனால் இதை உடைப்பதற்கு கேரளாவில் உள்ள காங்கிரஸூம், கம்யூனிஸ்டும் ஒன்றுபட்டு நிற்கின்றது. அந்த கம்யூனிஸ்ட் கட்சி தான் இன்று மதுரையில் நமக்கு எதிராக போட்டியிடுகிறது இவர்களுக்கெல்லாம் மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என அவர் தெரிவித்தார்.