திமுக சார்பில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் மருத்துவர் சரவணன் நமது ஈடிவி பாரத்துக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்பேட்டியினை கேள்வி, பதில் வடிவில் இங்கு தொகுத்துள்ளோம்.
கேள்வி: திருப்பரங்குன்றத்தில் போட்டியிடுவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
- பதில்: மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டிருக்கிறேன். 39+1 மக்களவைத் தொகுதிகள், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பரப்புரை முடியும் தருவாயில் உள்ள நிலையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. தொடர்ந்து, மீதமுள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் வரவிருக்கிறது. இத்தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெற்று மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அமைக்கும்.
கேள்வி: திருப்பரங்குன்றம் அதிகமான இளைஞர்களைக் கொண்ட தொகுதியாக உள்ளது. அவர்களின் வாக்கைப் பெறுவதற்கு ஏதேனும் சிறப்புத் தேர்தல் அறிக்கை உள்ளதா?
- பதில்: திமுகவின் தேர்தல் அறிக்கையே தேர்தலின் ஹீரோ என்று ஸ்டாலின் கூறியது போல இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பற்றிய உறுதிமொழியும் தேர்தல் அறிக்கையில் உள்ளது. ஆட்சியில் இருக்கும் மோடி அரசும், அதிமுகவும் இளைஞர்களுக்காக அறிவித்த எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. அதனால் எங்களுக்கு அவர்களின் வாக்கு வந்துசேரும். அது மட்டுமின்றி இந்தக்கால இளைஞர்கள் இணையத்தைப் பயன்படுத்துவதால் தற்போது நிலவிவரும் சூழ்நிலை குறித்து அவர்களுக்கு தெரியும். அத்துடன் மத்தியில் பாஜகவும், தமிழ்நாட்டில் அதிமுகவும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் இளைஞர்கள் உறுதியாக உள்ளனர்.
கேள்வி: பல புதிய கட்சிகள் வந்துள்ளதால் உங்களின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?
- பதில்: திமுக ஒரு வலுவான இயக்கம். அதிமுகவிற்கு முன்பே தோன்றிய ஒன்று. அது மட்டுமின்றி இப்போது ஸ்டாலினின் வழிநடத்தலில் ஒரு அபாரமான இடத்தில் உள்ளது. இந்தச் சிறிய கட்சிகளால் எங்களின் வெற்றிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
கேள்வி: பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருப்பதால் உங்களது வெற்றி எப்படி இருக்கும்?
- பதில்: பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதால் அதிமுக மேலும் அதலபாதாளத்திற்கு செல்லப் போகிறது. அதிமுக தொண்டர் ஒருவர் தற்போதைய ஆட்சியைக் கண்டு மனக்குமுறல்களுடன் என்னிடம் பேசியபோது எங்களது வாக்கும் உங்களுக்குத்தான் என்று கூறினார். அதனால் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும். திமுக வேட்பாளர் மருத்துவர் சரவணனுடனான எங்களது பிரத்தியேகப் பேட்டி