நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் நூறு சதவிகித வாக்குப்பதிவுகளுக்காக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டாலோ அல்லது வன்முறைகளில் ஈடுபட்டாலோ தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 1950 என்ற கட்டணமில்லா அலைபேசி வழியாக பொதுமக்கள் தங்களது புகார்களை பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும், வாக்குச்சாவடியில் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தாலோ, வாகன போக்குவரத்து பாதிப்பு இருந்தாலோ உடனடியாக 1950 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தகவல் கொடுத்தால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஆணைய அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதேபோல், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க தேவையான வசதிகள் இல்லாத பட்சத்திலும் இந்த எண்ணில் தகவல் தரலாம். இவை தவிர அரசியல் கட்சியினர் வாக்குகளுக்கு பணம் பட்டுவாடா செய்வதாகத் தெரிந்தாலும், உடனுக்குடன் 1950 என்ற எண்ணுக்கு தகவல் கொடுத்தால் அந்த புகார் தொடர்பாக தேர்தல் பறக்கும் படை, தேர்தக் கண்காணிப்பு சிறப்பு அதிகாரிகள் மற்றும் வருமானவரித் துறை அதிகரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு உரிய நேரத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
1950 என்ற எண்ணில் புகார்கள் கொடுக்கும் பொதுமக்கள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை இந்த எண்ணில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான புகார்கள் பொதுமக்களால் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், இந்த எண்ணின் சேவை 24 மணி நேரமும் செயல்படுவதால் பொதுமக்கள் அச்சமின்றி தங்களின் புகார்களை தெரிவிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.