தூத்துக்குடி: கடந்த மே 22ஆம் தேதி தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிராக 99 நாட்கள் அறவழிப்போராட்டம் நடத்தி வந்த பொதுமக்கள், 100ஆவது நாளில் ஆலையை நிரந்தரமாக மூடி நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கத் திட்டமிட்டிருந்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்த ஊர்வலமாக வந்து இணைந்து மனு கொடுக்க வந்த மக்கள் பேரணியில் கலவரம் வெடிக்க, அப்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், பொது மக்களில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
அதுவரை மாவட்டப் பிரச்னையாக இருந்த ஸ்டெர்லைட் ஆலை விவகாரம், துப்பாக்கிச்சூட்டிற்குப் பின்னர், தேசியப் பிரச்னையாகி அனைவரின் கவனத்தையும் தூத்துக்குடி பக்கம் குவிய வைத்தது.
இதற்கிடையில், கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் திமுகவின் நட்சத்திர வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து வந்த இரண்டு சட்டப்பேரவைத் இடைத்தேர்தலில், விளாத்திகுளம் தொகுதியில் அதிமுகவும், ஸ்டெர்லைட் ஆலை இருக்கின்ற ஒட்டப்பிடாரம் தொகுதியில் திமுகவும் வெற்றி பெற்றது. இந்தப் பின்னணியில் வர இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், பிரதான அரசியல் கட்சிகளின் முன் பல்வேறு சாவல்களை பரப்பி வைத்திருக்கிறது இந்தத் தனியார் தாமிர ஆலை.
ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்ட பின்னர், வ.உ.சி. துறைமுகத்தின் வருடாந்திர இறக்குமதி செயல்பாடுகள் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு குறைந்து, வருவாய் இழப்பையும் சந்தித்தது. ஸ்டெர்லைட் ஆலை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த தாமிரதாது மணலும், ஆலையின் அனல் மின்நிலையத்திற்கான நிலக்கரி இறக்குமதி நிறுத்தப்பட்டதுமே வருவாய் இழப்புக்கு முக்கிய காரணம்.
அதே போல, நேரடியாக உள்ளூர் மக்களுக்கு ஆலை நிர்வாகம் அதிக வேலை கொடுக்காத போதும், ஆலையை நம்பி இயங்கி வந்த துணை தொழில்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டு தற்காலிக வேலையின்மையும், பணப்புழக்கத்தில் தேக்கமும் ஏற்பட்டது. இந்தத் துணைத் தொழில்களின் வேலையிழப்பு, பொருளாதாரத்தில் மட்டும் இல்லாமல், சமூக காரணிகளிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன.
தென்தமிழ்நாட்டில், தூத்துக்குடி வளர்ந்து வரும் தொழில்நகரமாக அறியப்பட்டாலும், இங்குள்ள மக்களில் பெரும்பாலானவர்கள், மரபு தொழில்களான வேளாண்மை, மீன் பிடித்தொழில்களையே விரும்புகிறவர்களாக இருக்கின்றனர். இதனைத் தவிர உப்பு உற்பத்தி, பனைசார் தொழில்களும் சொல்லும் படியாக இல்லை என்பது இம்மாவட்ட மக்களின் பெருஞ்சோகம்.
இதையும் படிங்க: திமுகவை வீழ்த்தக் கூடிய ஒரே சக்தி எடப்பாடி - எஸ்.பி.வேலுமணி