சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் இரவு ஏழு மணி வரை உத்தேசமாக 71.79 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.
நள்ளிரவு 12 மணி முதல் 1 மணிக்குள் முழு விவரம் தெரியவரும். தற்போதைய வாக்குப்பதிவு விழுக்காடு உத்தேசமாக 71.79 என்றுள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி 78 விழுக்காடும், மாநிலத்திலேயே குறைவாக சென்னையில் 59.4 விழுக்காடும் வாக்குப் பதிவாகியுள்ளது.
எந்தவொரு தொகுதியிலும் மறுவாக்குப் பதிவுக்கு இதுவரை வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. மறுவாக்குப் பதிவு தொடர்பாக நாளை(ஏப்.7) அரசியல் கட்சிகள் ஏதும் கருத்து கூறினால், அதுகுறித்து ஆலோசிக்கப்படும்.
வாக்குப்பதிவு எந்திரம் ஏதும் கைப்பற்றப்படவில்லை. அதுபோன்று வரும் பொய் தகவல்களை நம்ப வேண்டாம். நாளை (ஏப்ரல்.7) முதல் பறக்கும் படை, நிலைக் கண்காணிப்பு குழுவினரால் பணம் பறிமுதல் செய்யப்படமாட்டாது எனத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் 75 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு, சிசிடிவி மூலம் கண்காணிப்பு, மையங்களில் ஜெனரேட்டர் வசதி செய்யப்படும்.
அறந்தாங்கி தொகுதியில் வாக்குப்பதிவு எந்திரம்(ஈவிஎம்) உடைக்கப்ப்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது. அதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். நேற்று வரை(ஏப்.5) உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட பணம் மற்றும் நகைகள் 445.81 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன" என்றார்.