செங்கல்பட்டு: எதிர்வரும் ஏப்ரல் 6ஆம் தேதியன்று, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. எந்த கட்சி ஆட்சி அமைக்கும்? எந்த வேட்பாளர் வெற்றி பெறுவார்? என்று, தமிழ்நாடே பரபரத்துக் கிடக்கிறது.
இந்த தேர்தல் களோபரத்திற்கு இடையே, தங்களுடைய கதறல் யார் காதிலும் விழவில்லை என்று, வர்த்தகர்கள் ஆவேசத்துடன் கூறுகின்றனர். ரூ.50,000க்கு மேலாக பணத்தை எடுத்துச் செல்பவர்கள், உரிய ஆவணத்தைக் காட்ட வேண்டும் என்று விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களிலும், தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
குமுறும் வர்த்தகர்கள்
இந்த சோதனைகள்தான், தங்கள் வாழ்வாதாரத்தையே சோதனைக்குள்ளாகி வருவதாக, வர்த்தகர்கள், பொதுமக்கள், விவசாயிகள் குமுறுகின்றனர். தாங்கள் எடுத்துச் செல்லும் பணத்திற்கான உரிய ஆவணங்கள் என்று எதை அலுவலர்கள் குறிப்பிடுகின்றனர் என வர்த்தகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தங்கள் வர்த்தகத்துக்கு தேவையானப் பொருள்களை கொள்முதல் செய்ய, பல்வேறு வகைகளில் பணம் திரட்ட வேண்டியுள்ளதாக குறிப்பிடும் இவர்கள், கடந்த ஒரு வருடமாக கரோனா பாதிப்பால் வியாபாரம் முற்றிலும் நசிந்து விட்ட நிலையில், தற்போது கடனை வாங்கித் தான் பொருட்கள் வாங்க வேண்டியுள்ளதாகக் கூறுகின்றனர். அவ்வாறு கடன் பெற்று எடுத்துச் செல்லும் பணத்திற்கு, எந்த ஆவணத்தை காட்ட முடியும் என்று ஆதங்கப்படுகின்றனர்.
அரசியல்வாதிகள் பணத்திற்கு தடையில்லை
அதேபோல் தங்கள் வீட்டிலிருந்து, தங்கள் கடைக்கு எடுத்துச் செல்லும் பணத்திற்கு, எந்த ஆவணங்களை காட்டுவது என்று குமுறுகின்றனர். பணத்தை கைப்பற்றுவோம் என்ற பெயரில் நடைபெறும் சோதனைகள், உண்மையில் அரசியல்வாதிகளின் பணப் பரிமாற்றத்திற்கு எந்த தடையும் ஏற்படுத்தவில்லை என்றும், அன்றாடம் காய்ச்சிகளான பொதுமக்கள், வர்த்தகர்கள் போன்றோரின் பணங்கள் தான் பெரும்பாலும் பறிமுதல் செய்யப்படுகிறது என்பதும் வர்த்தகர்களின் ஆதங்கமாக உள்ளது.
பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகள்
இதில் 50 ஆயிரம் ரூபாய் என்ற அளவுகோலை, குறைந்தபட்சம் இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையும், காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது என்று வேதனை தெரிவிக்கின்றனர். வர்த்தகர்கள் மட்டுமன்றி, நெல்லை கொள்முதல் செய்ய வருபவரும், விற்பனை செய்துவிட்டு வரும் வியாபாரிகளும், தற்பொழுது முடக்கப்பட்டுள்ளனர். கல்யாண சீர்வரிசைக்காக வாங்கிவரும் பொருட்களையும், பறக்கும்படையினர் பறிமுதல் செய்வதால், பொதுமக்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதோடு மட்டுமின்றி, நெருங்கிய உறவினர்கள், உடல் நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும்போது, அவர்கள் சிகிச்சைக்காக யாரிடமேனும் கடன் வாங்கி எடுத்துச்செல்லும் பணத்திற்கு எந்த ஆவணத்தைக் காட்டுவது என்ற நியாயமான கேள்வியும் எழுப்புகின்றனர்.
திகில் கிளப்பும் தேர்தல்
தேர்தல் திருவிழாவை உற்சாகமான மனநிலையில் எதிர்கொள்ளும் நிலை போய், தற்போது தேர்தல் வருகிறது என்ற திகில் மனநிலையிலேயே, இரு மாதங்களாக வாழ்ந்து வரும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சல், சொல்லி மாளாது என்கின்றனர். அனைத்து தரப்பினரும். நோக்கம் நல்ல நோக்கம் தான் என்றாலும், அதனை செயல்படுத்தும் முறை, அனைத்து தரப்பினரையும் சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது என்பதே உண்மை.
ஓட்டுக்கு கொடுக்கப்படும் பணத்தை தடுப்பதே குறிக்கோள் என்றால், அதை செயல்படுத்த இதை விட எளிதான, வலிமையான வழிமுறைகளை கடைப்பிடிக்கலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இதுவரை பிடிபட்டுள்ள பணம், வங்கியில் இருந்து ஏ.டி.எம்.முக்கு எடுத்துச்செல்லப்படும் பணம், வர்த்தகர்கள் தங்கள் வியாபாரத்திற்கு எடுத்துச்செல்லும் பணம் போன்றவைதான் பிடிபட்டுள்ளதே தவிர, அரசியல்வாதிகளின் பணம் பிடிபட்டுள்ளதா என்றும் ஆவேசத்துடன் வர்த்தகர்கள் தங்கள் கேள்விகளை முன்வைக்கின்றனர்.