சேலம்: சேலம் மேற்குத் தொகுதி பாமக வேட்பாளர் இரா. அருளை ஆதரித்து, புது சாலையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், காரில் அமர்ந்தபடியே பாமக நிறுவனர் ராமதாஸ் பேசினார்.
அப்போது அவர், "தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கப்பட்டது. வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு மூலம் மாணவ, மாணவிகள் நல்ல தரமான கல்வி பெற்று, வேலைவாய்ப்பு பெற வேண்டும். அனைவருக்கும் இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும். எல்லா சமுதாய மக்களும் படித்து வேலைவாய்ப்பு பெற வேண்டும். அதற்காகத் தொடர்ந்து பாடுபடுவேன்.
அன்றும் பல மதங்கள் இருந்தன. அதையும் தாண்டி அன்பு இருந்தது. நல்லிணக்கத்துடன் மக்கள் வாழ வேண்டும். தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக இருந்துவருகிறது. அமைதிப்பூங்காவாக இருக்க முதலமைச்சர் பல்வேறு திட்டங்களைச் செய்துள்ளார். எடப்பாடி கே. பழனிசாமிதான் இம்முறையும் முதலமைச்சர் ஆவார். திமுகவின் அத்தியாயம் முடிந்துவிட்டது. இனி திமுக தேறாது. மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும்.
மக்களின் சேமிப்புத் திறனை முடக்கும் அரசு - தொடர்ந்து குறைக்கப்படும் வட்டி!
நார்வே, சுவீடன், பின்லாந்து உள்ளிட்ட ஸ்கான்டிநேவியன் நாடுகளில் கல்வி இலவசமாக வழங்கப்படுகிறது. அங்கு மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். அதுபோன்ற நிலையை தமிழ்நாடு அடைய வேண்டும். சிங்கப்பூர் போன்று சேலம் மாநகரம் வளர வேண்டும். திமுகவினர் திரை உலகத்தை ஆக்கிரமித்திருந்தனர். சேலத்தில் நிலப்பறிப்பு சம்பவத்தில் ஆறு கொலைகள் நடந்தன. திமுக ஆட்சிக்கு வந்தால் நிலப்பறிப்புதான் நடைபெறும்.
அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதைப் போல பெண்களுக்குச் சலவை இயந்திரம் வழங்கப்படும். ஆண்டுக்கு ஆறு சமையல் எரிவாயு உருளை வழங்கப்படும். அதிமுக தேர்தல் அறிக்கை அள்ள, அள்ள குறையாத அமுத சுரபிபோல உள்ளது. பாமகவின் தேர்தல் அறிக்கை வளர்ச்சிக்கான திட்டமாகும்.
சேலம் மேற்குத் தொகுதியில் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும். செட்டிச்சாவடி பகுதியில் வாழும் 5,000 குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்.
அம்மாபாளையம் மகளிர் தொழில்முனைவோர் நவீன வளர்ச்சிப் பயிற்சிக்கூடம் அமைக்கப்படும். சேலத்தில் 11 தொகுதிகளில் அதிமுக, பாமக கூட்டணி வெற்றிபெற வேண்டும்" என்று தெரிவித்தார்.