தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மற்றும் குற்ற வழக்குகள் விவரம் குறித்த அறிக்கையை தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பகம் மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் இணைந்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வெளியிட்டது.
தேர்தலில் வெளிப்படைத் தன்மை அதிகரிப்பதை வலியுறுத்தி, இந்த அமைப்புகள் வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரத்தில் வெளியிட்டத் தகவல்கள் தொகுத்து அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளன.
இதனை வெளியிட்டு பேசிய தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பக ஒருங்கிணைப்பாளர் ஜோசப் விக்டர் ராஜா, 'சட்டப்பேரவைத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 3,998 நபர்கள் வேட்பு மனுதாக்கல் செய்த நிலையில், சில வேட்பாளர்களின் ஆவணங்களில் உள்ள தகவல்கள் முறையாக கிடைக்காததால் 3,559 வேட்பாளர்களின் தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, இந்த அறிக்கையில் வெளியாகியுள்ளது.
இதில், 3,559 வேட்பாளர்களில், 466 வேட்பாளர்கள், அதாவது 13 விழுக்காடு வேட்பாளர்கள் தங்களுக்கு எதிராக குற்ற வழக்குகள் உள்ளதாக அறிவித்துள்ளனர். இதில், 6 விழுக்காடு வேட்பாளர்கள், அதாவது 207 வேட்பாளர்களுக்குக் கடுமையான குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் நிலுவையில் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கட்சிகள் அடிப்படையில், திமுகவில் உள்ள 178 வேட்பாளர்களில் 136 பேர் அதாவது 76 விழுக்காடு பேரும், 191 அதிமுக வேட்பாளர்களில் 46 பேர் அதாவது 24 விழுக்காடு பேரும், பாஜக சார்பில் போட்டியிடும் 20 வேட்பாளர்களில் 15, அதாவது 75 விழுக்காடு பேரும், 21 காங்கிரஸ் வேட்பாளர்களில் 15 நபர்கள் அதாவது 71 விழுக்காடு பேரும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேமுதிகவில் 30 விழுக்காடு வேட்பாளர்களும், பாமகவில் 44 விழுக்காடு வேட்பாளர்களும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல், திமுகவில் 28 விழுக்காடு பேர் கடுமையான குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்களும், அதிமுக சார்பில் போட்டியிடும் 9 விழுக்காடு வேட்பாளர்களும், பாஜக, காங்கிரஸ் சார்பில் முறையே 40 விழுக்காடு மற்றும் 29 விழுக்காடு நபர்களும் கடுமையான குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களாக உள்ளனர் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரப் பின்னணி
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பெரும்பாலானவர்கள் கோடீஸ்வர வேட்பாளர்களாக உள்ளது ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. இதில், ஆய்வு செய்யப்பட்ட 3,559 வேட்பாளர்களில், 652 பேர் கோடீஸ்வர வேட்பாளர்களாக உள்ளனர்.
அதிமுக வேட்பாளர்களில் 86 விழுக்காடு பேரும், திமுக வேட்பாளர்களில் 87 விழுக்காடு பேரும் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியில் அதிகபட்சமாக 91 விழுக்காடு வேட்பாளர்கள், அதாவது 19 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர். பாஜக வேட்பாளர்களில் 75 விழுக்காடு பேர், அதாவது 15 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.1.72 கோடி உள்ளது.
கல்வித் தகுதி
49 விழுக்காடு வேட்பாளர்கள் 5 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்தவர்களாகவும், 193 பேர் டிப்ளமோ படித்தவர்களாகவும், 41 விழுக்காடு பேர் பட்டப்படிப்பு படித்தவர்களாவும் உள்ளனர். 61 பேர் எழுதப் படிக்க மட்டும் தெரிந்தவர்களாகவும், 106 பேர் எழுதப் படிக்கத் தெரியாதவர்களாகவும் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
25 வேட்பாளர்கள் கல்வித் தகுதியைக் குறிப்பிடவில்லை.
பெண் வேட்பாளர்கள்
பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நிலுவையில் உள்ள நிலையில் 3,559 வேட்பாளர்களில், வெறும் 380 வேட்பாளர்கள் அதாவது 11 விழுக்காடு பெண் வேட்பாளர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிடுகின்றனர்’ என தமிழக தேர்தல் கண்காணிப்பகம் மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: சிஏஏ, நீட் தேர்வு, வேளாண் சட்டங்களை திரும்ப பெற பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும்- ஸ்டாலின்