சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டையிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், சமத்துவ மக்கள் கட்சி சரத்குமார், துணை பொதுச் செயலாளர் ரவி ஆகியோரைச் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தேர்தலுக்கு அதிக நாட்கள் இருக்கும் என நம்பினோம். ஆனால் அது இல்லை. பழ.கருப்பையா நம்முடன் இணைந்துள்ளார், தேர்தலில் அவர் வேட்பாளராக நிற்கப் போகிறார். நேர்மையாளர் கூடாரத்திற்கு அவரை வரவேற்கிறேன். சட்ட பஞ்சாயத்து இயக்கமும் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கும்.
தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்திருப்பவர்களுக்கு மார்ச் 6ஆம் தேதி நேர்காணல் நடைபெறும். பழ. கருப்பையா, பொன்ராஜ், ரங்கராஜன், செந்தில் ஆறுமுகம் - சட்டப்பஞ்சாயத்து இயக்கம், சுரேஷ் ஐயர் ஆகியோர் வேட்பாளர் தேர்வுக் குழுவில் உள்ளனர்.
மீண்டும் ஒரு மக்கள் நல கூட்டணி... இம்முறை இயக்குநர் கமல் ஹாசன்?
முதற்கட்ட வேட்பாளர்களை மார்ச் 7ஆம் தேதி அறிவிப்போம். மார்ச் 3ஆம் தேதி அடுத்த கட்ட பிரச்சாரம் தொடங்க இருக்கிறேன். காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும் அமமுக கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம். கருணாநிதி சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் பொழுது, அவர் சக்கர நாற்காலியைத் தள்ளிக்கொண்டு சென்றதில் நானும் ஒருவன்.
தொழில் அடிப்படையில் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் அளிப்போம். தற்போது இருக்கும் ஆட்சியில் ஆட்சித் திறன் இல்லாததால், அரசு கஜானா காலியாக உள்ளது. எங்களைப் போன்று ஆட்சித் திறன் உள்ளவர்கள் ஆட்சிக்கு வந்தால், அரசு கஜானா எப்போதும் நிரம்பியே இருக்கும். அதன் மூலம் இல்லத்தரசிகளுக்கு அரசு ஊதியம் வழங்கப்படும். மேசைக்கு அடியில் பணத்தைக் கொடுக்காமல் மேசைக்கு மேல் கொடுங்கள்" எனத் தெரிவித்தார்.