தர்மபுரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, நேற்று (மார்ச் 25) துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர், "வரும் தேர்தலில் யார் ஆட்சி நல்ல, நிலையான ஆட்சி என்பதை உணர்ந்து, மக்கள் வாக்களிக்க வேண்டும். தமிழ்நாட்டு உழவர்களுக்கு அனைத்தும் மானிய விலையில் வழங்கப்பட்டுவருகின்றன. இதனால் நெல் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டிற்கு முதலிடம்.
இந்தத் தேர்தல் யார் ஆட்சி நல்ல ஆட்சி என்பதைத் தீர்மானிக்கும். திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னது எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அதிமுக ஆட்சியில்தான் மக்களுக்கு நல்லது நடைபெற்றுள்ளது. கடந்த 16 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் எதுவும் செய்யவில்லை. ஒரு மருத்துவக் கல்லூரிகூட காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்க முடியவில்லை.
மோடி ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரிகள் வழங்கப்பட்டுள்ளன. மதுரைக்கு ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை பெற்றுள்ளோம். தற்போது பணி நடைபெற்றுவருகிறது. ஆனால் ஸ்டாலின் பணிகள் நடைபெறவில்லை எனக் கூறிவருகிறார். இன்னும் ஆறு மாத காலத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படும்.
ஜல்லிக்கட்டுக்குத் தடைவந்ததற்கு திமுக, காங்கிரஸ்தான் காரணம். ஜல்லிக்கட்டுத் தடை நீக்க வேண்டும் என மெரினாவில் 15 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை பிரதமர் கவனத்திற்கு கொண்டுசென்றவுடன் உடனே தடையை நீக்கி அனுமதி வழங்கினார்" எனப் பேசினார்.
தர்மபுரி மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள்
தர்மபுரி - எஸ்.பி. வெங்கடேஸ்வரன் (பாமக)
பாப்பிரெட்டிப்பட்டி - கோவிந்தசாமி (அதிமுக)
பாலக்கோடு - கே.பி. அன்பழகன் (அதிமுக)
பென்னாகரம் - ஜி.கே. மணி (பாமக)
இதையும் படிங்க:எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை