செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மதச்சார்பற்ற கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக எஸ்.எஸ்.பாலாஜி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று (மார்ச்.22) திருப்போரூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார். அப்போது மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:
”கலைஞரும் ஜெயலலிதாவும் இல்லை என்ற வாய்ப்பை பயன்படுத்தி, பாஜக அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. தலைமை இல்லாத அதிமுகவை பயன்படுத்தி சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்று அல்லது நான்கு இடங்களைக் கைப்பற்றி தமிழ்நாட்டில் காலூன்றி விடலாம் என பாஜக மனப்பால் குடிக்கிறது.
அதிமுக, பாமக ஆகிய இரு கட்சிகளையும் அழிக்கப் போவது திமுக அல்ல; பாஜகதான். இரட்டை இலை சின்னம், மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுபவர்கள் அடிப்படையிலேயே ’பாஜகவின் பினாமி’ என்பதை மறந்துவிடக்கூடாது .கூட்டணியில் இருந்து கொண்டே குழி பறிக்கும் திறமை கொண்டவர்கள்தான் பாஜககாரர்கள்.
பாஜக பாசிசப் போக்கை நீக்க வேண்டுமெனில், திமுகவுடன் இணைந்து செயல்படுங்கள். விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க வேண்டுமெனில், திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து செயல்படுங்கள். தமிழ்நாட்டில், திமுகவை வீழ்த்த வேண்டியதைவிட அதிமுகவை அழிக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டம். இதே நிலைக்குதான் கூடிய விரைவில் பாமகவும் வரும்.
இட ஒதுக்கீடு இல்லை என அனைத்தையும் தனியார்மயப்படுத்துவதால் பாதிக்கப்படுவது யார்? சமீபத்தில் வன்னிய சமுதாயத்திற்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. ஆனால் அத்தனையும் தனியார்மயம் செய்துவிட்டால் அரசுத்துறை, பொதுத்துறை ஏதுமில்லை. எப்படி இட ஒதுக்கீடு கிடைக்கும்.
தமிழ்நாட்டை பாசிச சக்திகளிடமிருந்து பாதுகாக்கக் கூடிய திறமை திமுக, அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு மட்டும்தான் உண்டு. உண்மையாகவே திமுக எதிர்க்கக்கூடிய கட்சி அதிமுக அல்ல; பாஜகதான். திருப்போரூர் தொகுதியில், பாஜகவின் சின்னம் மாம்பழம் அவ்வளவுதான். இவர்களெல்லாம் பாஜகவின் பி டீம்.
பூணூல் போடாத ஒரு திருவள்ளுவரை வரைந்து தமிழ் சொந்தங்களுக்கு கொடை அளித்தவர் தலைவர் கலைஞர். அப்படிப்பட்ட திருவள்ளுவருக்கு தற்போது வந்துள்ள பாடப்புத்தகத்தில் காவி வண்ணம் பூசிய கொச்சைப்படுத்துகிறார்கள் இதை திருவள்ளுவர் பார்த்திருந்தால் என்னவாகும்” எனப் பேசினார்.
இதையும் படிங்க:’மொத்த நாட்டையும் சரி செய்வதற்காக வந்திருக்கிறேன்’ - சீமான் நம்பிக்கை