திருச்சி: துறையூர் அடுத்த புலிவலம் காவல் சரகத்திற்குட்பட்ட திண்ணனூர் கிராமத்தில் மகாலிங்கம் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருபவர் அரவிந்தன். இவரது மனைவி ரேணுகா தேவி. இவர்களுக்கு திருமணமாகி ஆறு மாதங்களே ஆன நிலையில் தனியாக குடித்தனம் நடத்தி வருகின்றனர்.
அரவிந்தன், முறையாக கேட்டரிங் பயின்று சமையல் மாஸ்டராக உள்ளார். நேற்று (டிச. 18) நள்ளிரவில் பக்கத்து வீட்டில் கதவு உடைக்கப்பட்ட சத்தம் கேட்ட அரவிந்தன், பயத்தில் அருகில் உள்ள தனது உறவினரான யோகேஸ்வரன் என்பவருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார்.
ஒன்றுக்கூடிய முகமூடி கொள்ளையர்கள்
உடனே யோகேஷ்வரன் தனது சகோதரர் நகுலேஷை அழைத்துக் கொண்டு அரவிந்தன் வீட்டிற்கு சென்று பார்க்கும் பொழுது, தனியாக இருட்டில் நின்ற நபர் கருப்பு டவுசர், கருப்பு பனியன், கருப்பு முகமூடி அணிந்தபடி திரும்புவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
![முகமூடி கொள்ளையர்களை தேடும் திருச்சி புலிவலம் காவலர்கள், Trichy Pulivalam police searching Masked Robbers](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tri-01-robbery-script-photo-tn10045_19122021093023_1912f_1639886423_926.jpg)
அந்த நபர் திருடன் என்று தெரிந்து சுதாரிப்பதற்குள் முகமூடி அணிந்திருந்த நபர் கையில் வைத்திருந்த கட்டையால் யோகேஷ்வரன், நகுலேஷை பலமாக தாக்கினான். இதில், இருவருக்கும் காயம் ஏற்பட்டது. மேலும், இருவரின் கூச்சல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஒன்றுகூடியுள்ளனர்.
கடப்பாரை கொண்டு தாக்கு
வீட்டில் பதுங்கியிருந்த மேலும் நான்கு நபர்கள் கடப்பாரை, உருட்டுக்கட்டைகளை கையில் வைத்து பொதுமக்களை மிரட்டியவாறு காட்டுப் பகுதிக்குள் தப்பியோடி இருட்டில் மறைந்தனர். முன்னதாக, மகாலிங்கம் என்பவரது வீட்டில் கதவை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் பீரோவை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அருகில் பெரியசாமி என்பவரின் வீட்டின் கதவை கடப்பாரை கொண்டு உடைக்க முயற்சித்துள்ளனர்.
![முகமூடி கொள்ளையர்களை தேடும் திருச்சி புலிவலம் காவலர்கள், Trichy Pulivalam police searching Masked Robbers](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tri-01-robbery-script-photo-tn10045_19122021093023_1912f_1639886423_49.jpg)
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் பேரில் புலிவலம் காவலர்கள் தப்பி ஓடிய முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். நள்ளிரவில் நடந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மேலும், திண்ணனூர் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செல்போன் டவர் சிக்னல் சரிவர கிடைப்பதில்லை எனவும், அவசரத் தேவைகளுக்கு யாரிடமும் தொடர்பு கொள்ள முடியாத நிலையும் உள்ளதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கல்யாண் ஜுவல்லரியில் மோசடி: கிளை மேலாளர் கைது