வேலூர்: குடியாத்தம் - சித்தூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சரவணன் சில நாள்களுக்கு முன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது கனரக வாகனங்கள், மினி வேன், ஆட்டோ, இருசக்கர வாகனங்களைத் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்துக்கொண்டிருந்தார்.
அந்நேரத்தில் சில வாகன ஓட்டிகளிடம் 100 ரூபாய், 50 ரூபாய் என கையூட்டு வாங்கி வாகனங்களை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. மேலும், இவர் கையூட்டுப் பெறும் காணொலியை வாகன ஓட்டுநர் ஒருவர் தனது கைப்பேசியில் பதிவுசெய்து அதைச் சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார்.
அந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி காவல் கண்காணிப்பாளரின் பார்வைக்குச் சென்றது.
இதனையடுத்து சரவணனை ஆயுதப்படைக்கு மாற்றி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.