சென்னை: வேளச்சேரி புதிய தலைமை காலனியைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்து ஓய்வுபெற்றவர்.
2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெங்கடாச்சலம் ஓய்வுபெற இருந்த நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவிப்பில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்புதுறை காவல் துறையினர் வெங்கடாச்சலத்தின் வீடு, மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் என 5 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் ரூ.13.5 லட்சம் பணம், 11 கிலோ தங்கம், 6 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 15.25 கிலோ சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில், வேளச்சேரியில் உள்ள வீட்டில் திடீரென வெங்கடாச்சலம் தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த வேளச்சேரி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வெங்கடாச்சலத்தின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை குறித்து வேளச்சேரி காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்பு துறை நடத்திய சோதனையில் பணம் மற்றும் நகைகளை பறிமுதல் செய்ததால் வெங்கடாச்சலம் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், அதனால் தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும். லஞ்ச ஒழிப்பு துறை சோதனைக்கு பிறகு வெங்கடாச்சலம் சொந்த ஊரான, சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு சென்ற போது, அவரை ஊரார் மரியாதை குறைவாக நடத்தியதாகவும், இது குறித்து கேள்வியெழுப்பி அவரது மனைவி அடிக்கடி சண்டையிட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் டிசம்பர் 6ஆம் தேதி (திங்கள்கிழமை) விசாரணைக்கு ஆஜராக வெங்கடாச்சலத்தை அழைத்திருந்ததாகவும், இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு இறந்திருக்கலாம் எனவும் காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.
தற்போது, வெங்கடாச்சலத்தின் இரு கைப்பேசிகளையும் காவல் துறையினர் கைப்பற்றி சைபர் கண்காணிப்பு வல்லுநர் குழுவிடம் கொடுத்துள்ளனர். கூடிய விரைவில் இவர் மரணம் குறித்து முக்கிய தகவல் வெளியாகும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: ஒமைக்ரான் வகை எவ்வாறு மாறுபடுகிறது? அறிந்து கொள்ளுங்கள்!