சென்னை: மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவரான சுப்ரதா பீரோ என்பவர் சென்னை சவுகார்பேட்டையில் தங்க நகைப்பட்டறை வைத்து நடத்திவருகிறார். இவர் கடந்த ஜனவரி 10ஆம் தேதி யானைக்கவுனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அந்தப் புகாரில், "மேற்குவங்கத்தைச் சேர்ந்த முகமது உல் கசார் என்பவர், என்னிடம் தங்கக் கட்டிகளைக் கொடுப்பார். அதற்கேற்ப தங்க நகைகளாகப் பெற்றுக்கொள்வார். அதேபோல் கடந்த ஜனவரி 10ஆம் தேதி 350 கிராம் தங்கக் கட்டி கொடுத்து என்னிடம் தங்க நகைகளை வாங்கிச் சென்றார்.
பின்னர் அவர் அளித்த தங்கக் கட்டியைச் சோதித்துப் பார்த்தபோது, ஸ்டீலில் தங்க முலாம் பூசிய போலி நகை கொடுத்து ஏமாற்றியது தெரியவந்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தனிப்படை அமைத்து விசாரணை
இந்தப் புகாரின் அடிப்படையில் யானைகவுனி காவல் துறையினர் தனிப்படை அமைத்து, குற்றஞ்சாட்டப்பட்டவரைத் தீவிரமாகத் தேடிவந்தனர். சவுகார்பேட்டையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதில் சிக்காமல் இருக்க முகமது அல் கசார் காரின் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு தங்கக் கட்டிகளை வழங்கிச் சென்றது தெரியவந்தது.
இருப்பினும் காரின் பின்பக்கத்தில் இருந்த நம்பர் பிளேட்டின் எண்களை வைத்து விசாரணை செய்தபோது, அந்த எண்கள் போலியானவை எனக் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அந்தக் கார் சென்ற இடங்களிலுள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, புதுப்பேட்டையில் காரில் போலி ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு செல்வது கண்டறியப்பட்டது. பின்னர் முகமது உல் கசார் பயன்படுத்திய செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியபோது டவர் அயனாவரம் பகுதியை நோக்கிக் காண்பித்தது.
சிக்கிய மூன்று பேர்
இதனை வைத்து துப்புதுலங்கிய காவல் துறையினர், போலி தங்கக் கட்டிகளைகக் கொடுத்து ஏமாற்றிய அப்துல் கயும் முல்லா, பிரியாணி கடை வைத்துவருபவரான முகமது உல் கசார், கார் ஓட்டுநரான முகமது முசாக் உல் ஹக் ஆகிய மூன்று பேரை கைதுசெய்தனர்.
மூன்று பேரிடமும் நடத்திய விசாரணையில், முக்கிய நபரான அப்துல் கயும் முல்லா புளியந்தோப்பில் பிரியாணி கடை நடத்தி வரக்கூடிய முகமது அல் கசார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் இணைந்து தங்க நகை மோசடி செயலில் ஈடுபட திட்டமிட்டு, ஸ்டீலில் தங்க முலாம் பூசப்பட்டு தங்க கட்டி போல் தயார் செய்து, நகை தரம் பார்க்கக்கூடிய கடையில் வீசப்படும் வேறு துண்டு சீட்டை எடுத்து அதை மாற்றி மோசடியில் ஈடுபட சதி தீட்டம் தீட்டியுள்ளனர்.
அதன்பின்னர் சவுகார்பேட்டையில் நகைப்பட்டறை வைத்துள்ள சுப்ரதா பீரோவிடம் மோசடி செய்ய திட்டமிட்டு, நிஜ தங்க கட்டிகளை கொடுத்து தங்க நகை செய்ய சொல்லி அவரிடம் பழக்கம் ஏற்படுத்தி உள்ளனர்.
தொடர் மோசடி
இதனையடுத்து கடந்த ஜனவரி 10ஆம் தேதி காரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு ஓட்டுநராக முகமது முசாக் உல் ஹக்குவுடன் புதுப்பேட்டைக்குச் சென்று போலியாக அச்சடித்த நம்பர் ஸ்டிக்கரை ஒட்டியுள்ளனர். பின்னர் கார் மூலமாகச் சென்று போலி தங்கக் கட்டிகள், போலி நகை தரம் சீட்டையும் கொடுத்து ஏமாற்றியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதே கும்பல் ஒரு மாதத்திற்கு முன்பு, 300 கிராம் போலி தங்க கட்டிகள் கொடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது.
இவர்களிடம் மோசடி செய்த 300 கிராம் தங்கம், 4 செல்போன்கள், மோசடிக்கு பயன்படுத்தியக் கார், போலி ஸ்டிக்கர்கள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் மீனவர் கல்லால் அடித்துக் கொலை!