வடமாநிலத்தைச் சேர்ந்த மகேந்திர குமார் (23) கோடம்பாக்கம் , ரங்கராஜபுரம் இரண்டாவது தெருவில் உள்ள கட்டடத்தில் தங்கி சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார்.
மகேந்திர குமார் கடந்த 9ஆம் தேதியன்று இரவு ரங்கராஜபுரம் மெயின் ரோட்டிலுள்ள கடைக்கு சென்றபோது, அங்கு நின்றிருந்த இரண்டு நபர்கள் அவரது செல்ஃபோனை பறித்துக்கொண்டு, அருகில் தயாராக நிறுத்தியிருந்த காருக்குள் ஏறிச் செல்ல முயன்றனர்.
அப்போது மகேந்திர குமார் துரத்திக் கொண்டு வரவே, இரண்டு நபர்களும் காருக்குள் இருந்த நபர் என மூன்று பேரும் சேர்ந்து அவரை மிரட்டி தாக்கினர். பின்னர் காரில் ஏற்றிக்கொண்டு அருகிலுள்ள மைதானத்துக்கு கொண்டு சென்று அங்கு மகேந்திர குமாரின் கழுத்தில் பிளேடை வைத்து, அவர் வைத்திருந்த பணம் ரூ.800ஐ பறித்தனர். இதையடுத்து வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டிவிட்டு வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் காரில் ஏறி தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து மகேந்திர குமார் ஆர்2 கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
ஆர்2 கோடம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடங்களில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், குற்றவாளிகள் தப்பிச் சென்ற காரின் பதிவு எண்ணை வைத்தும் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட மகேஷ்(32), சந்திரசேகர் (29), சௌந்தரராஜன்(42) ஆகிய மூன்று நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து புகார் அளித்த மகேந்திர குமாரின் செல்ஃபோன், ரூ. 400 மற்றும் குற்றச்செயலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது
விசாரணையில், குற்றவாளிகள் 3 நபர்களும் தனியார் டாக்சியில் ஓட்டுநர்களாக பணிபுரிந்து வருவதாகவும், டாக்சி நிறுவனத்தின் காரில் சென்றபோது மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையும் படிங்க: ரூ.45 லட்சம் சுருட்டிய கும்பலின் தலைவி கைது!